அனைவருக்கும் வணக்கம் காலத்தால் முற்பட்ட சிவன் கோவில்கள் தேடி தரிசனம் செய்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் கோவில் சங்க இலக்கியமான பரிபாடலில்
“ நளிகடல் முன்னியது போலும் தீம் நீர்
வளிவரல் வைவை வரவு”
என்ற சிறப்பு மிக்க வரிகளுக்கு சொந்தம் கொண்டாடும் வைகை ஆற்றின் கரையில், சிற்பக்கலைக் கூடத்தில் ஒரு சிவன் கோவில் எனும் பெருமைக்குரிய சோழவந்தான் மருதோதைய ஈஸ்வரமுடையார் கோவில் தான்
இந்தக்கோவில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாவட்டத்தில் சோழவந்தான்க்கு மேற்கே 1கி.மீ தொலைவில் விக்கிரசோழமங்கலம் எனும் ஊரில் அருள்மிகு மருதோதைய ஈஸ்வரமுடையார் உடனுறை சிவனேசவள்ளி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பஸ்ஸ்டான்டில் இருந்து பஸ்வசதி சோழவந்தான் வரை இருக்கு. அங்கிருந்து ஆட்டோ மூலமாக இக்கோவிலுக்கு வரலாம். ஊருக்கு செல்லும் வழியின் இரண்டு பக்கமும் பார்த்தாலே கண்குளிரும் அளவுக்கு பச்சைப்பசேல் என வயல்வெளியும் மதுரை நகரத்தின் பக்கத்தில் இருந்தாலும் நகரிகம் கலக்காத நாகரிகம் ரொம்பவே அற்புதமாக இருந்தது.
வைகை ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்திருக்கு அக்காலத்தில் பெருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட இவ்வழித்தடம் எங்கிலுமே பாண்டிய மன்னர்கள் சைவம் மற்றும் வைணவத்தை வளர்த்துள்ளனர். இன்றும் சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப்பட்ட பொருட்களும் குறியீடுகளும் இவ் வைகை நதிக்கரையின் மடி கீழடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது எனும்போதே நம்மெல்லாம் பெருமிதம் கொள்ளத்தான் செய்கிறது. நதிக்கரைக்கு பக்கத்தில் இருக்கும் வழிநடையில் செல்லும் மக்கள் தங்கி இளைப்பாறுவழிநெடுகிலும் கோவில்களையும், தங்கி இளைப்பாறும் மண்டபங்களையும் பல்வேறு அரசர்களின் காலங்களில் கட்டியுள்ளனர்.
மதுரைக்கு அருகேயுள்ள இவ் விக்கிரமங்கலம் ஒரு காலத்தில் மிகப்பெரிய வாணிப மையமாக விளங்கியிருக்கிறது. விக்கிர மங்கலத்தின் நான்கு திசைகளில் இருந்தும் வந்து செல்ல வழிகள் இருந்துள்ளன. மதுரையில் இருந்து வரும் பழம்பெரும் வழி விக்கிரமங்கலத்தை அடையும். பின் அங்கிருந்து கல்யாணிபட்டி சித்தர் மலை வழியாக உசிலம்பட்டியை அடைந்து தேனி சின்னமனூர் வழியாக கேரளாவுக்குச் செல்கிறது. அந்தக்காலத்தில் இவ்வழியானது கேராளவையும் மதுரையையும் இணைக்கின்ற மிக முக்கிய வாணிப பெருவழியாக இருந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும்படியாக சிறு குன்றான உண்டாங்கல் மலை சித்தர்மலைகளில் 2000 ஆண்டுக்கும் முற்பட்ட தமிழ் பிராமி எனப்படும் தமிழ் தொல்எழுத்துகளை காணலாம். இவ்வழியில் மேலும் பல வணிக நகரங்கள் இருந்துள்ளன. வணிகக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. விக்கிரமங்கலத்திலுள்ள பாண்டியர் கால கல்வெட்டுகளில் இவ்வூர் தென்கள்ளக நாடு என்ற உள்நாட்டுப்பிரிவின் கீழ் இருந்ததை குறிப்பிடுகிறது. தென்கல்லக நாடு என்பது தென்கரையூர்’ முதல் ஆணையூர் வரை உள்ள ஊர்களை அடக்கியிருந்தது. .இப்பகுதியில் நாகமலைத்தொடர் மற்றும் சிறு மலைகள் இருப்பதால் கள்ளக நாடு எனும் காரணப் பெயராலும் அழைக்கின்றனர். தென்கள்ளக நாட்டில் விக்கிரமசோழபுரம் எனும் பெயரால் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
விக்கரமசோழபுரம் – பெயர்க்காரணம்
கி.பி.1050 முதல் 1079 வரை பாண்டிய நாட்டின் சோழநாட்டின் அரசரப்பிரதிநிதியாக விளங்கிய விக்கிரம சோழ பாண்டியனது பெயரால் இவ்வூர் விக்கிரம சோழபுரம் எனப் பெயரிடப்பட்டது. ஆதியில் விக்கிரம சோழபுரம் எனும் பெயரே மருவி விக்கிரமங்கலம் என அழைக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ஐகோலே எனும் வாணிக நகரத்தில் செல்வசெழிப்போடு வாழ்ந்த ஆயிரத்து ஐவர் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் எனும் வணிகர்களுடன் தொடர்பு வைத்துள்ள ஊராக இவ்வூர் விளங்கியிருக்கிறது. இதனால் இவ்வூரை “அய்யப்பழு தேசிப்பட்டினமான விக்கிரமசோழபுரம்” என்றும் அழைக்கப்பட்ட செய்தி இந்த திருக்கோவில் கட்வெட்டுகளில் காணப்படுகிறது.
கி.பி. 1400 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய வாணிக மையமாக இவ்வூர் விளங்கியிருக்கிறது. வணிகப்பெருவழியில் சரக்குகளை கொண்டு செல்லும் வணிகர்கள் தங்குகின்ற ஊராகவும் பலவித பொருட்களை விற்கும் சந்தையாகவும் விக்கிரமங்கலம் இருந்துள்ளது. பொருளாதார செழிப்பு மிக்க இவ்வூர் நிர்வாகத்தைக் கூட வணிகர்களே நடத்தி வந்துள்னர். செல்வாக்கோடு விளங்கிய இவ்வூரை காவல்காக்கும் வணிகவீரர்களுக்கும் அவர்களுக்கு தலைவனாக விளங்கிய சோனாதிபதியும் இந்த ஊரிலேயே தங்கியிருந்தனர். கி.பி.1050 இல் விக்கிரமசோழபுரத்தின் ஆரம்பகால பெயர் வேம்பத்தூர் ஆகும். இவ்வூரின் அருகேயுள்ள உண்டாங்கல் எனும் குன்றின் உள்ள கி.மு.2 ஆம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டில் வேம்பத்தூர் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே வசித்து வந்த சமண முனிவர்களுக்கு தங்குமிடத்தை இயற்கையா குகைத்தடத்தை வேம்பத்தூரைச் சேர்ந்தவர்கள் தர்மமாக செய்தார்கள் என்கிற செய்தி அங்கே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கள் பாண்டியர்கள் கல்வெட்டுகளோடு இக்கோவிலின் சிற்பக்கலையும் மேன்மையாக திகழ்வதே மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிறப்பு.
நாகமலை அருகேயுள்ள இவ்வூரைச் சுற்றிலும் அடிவாரத்தில் வெண்மை நிறக்கற்களே காணப்படுகின்றன. ஆனால் இவ்வாலயம் முழுதும் பிரம்மாண்டமான சிவப்பு கிராணைட் கற்கள் கொண்டு அழகாக கட்டப்பட்டுள்ளது. இது போன்ற கற்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் கிடைக்கிறது. புதுக்கோட்டையில் இருந்தே இக்கற்களை கொண்டு வந்து ஆலயம் எழுப்பியுள்ளனர்.
இந்த ஊர் உருவான நாளிலிருந்து 3 முறை பெயர் மாற்றம் செய்துள்ளனர். ஆனால் இங்குள்ள சிவனின் பெயர் மற்றும் தொன்று தொட்டு கோவில் கட்டியநாள் முதல் இன்று வரை மதுரோதைய ஈஸ்வரமுடையார் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சோழர்கள் நிர்வாக வசதிக்காக பாண்டிய நாட்டை
ராஜேந்திர சோழவளநாடு
மதுராந்தக வளநாடு
முடிகொண்ட சோழவளநாடு
உத்தம சோழ வளநாடு எனும் 4 பகுதியாக பிரித்திருந்தனர்.
இதில் மதுராந்தக வளநாடு என்பது மருவி மதுரோதைய வளநாடு என்று ஆனது. இந்த மதுரோதைய வளநாடு அமைந்திருந்த வைகைநதிக்கரையில் விக்கிரமசோழபுரம் அமைந்திருந்தது. எனவே மூலவர் பெயர் வளநாட்டின் பெராலேயே மதுரோதைய ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டது. மூலவர் விமானம் சோழர்களின் கட்டிடக்கலை போல ஏகதள விமான அமைப்புடையது
முதல் தளத்துடன் சிறப்பாக இக்கோவில் ஏகதள விமான அமைப்பைக்கொண்டுள்ளது. இதே போன்ற அமைப்பை
தஞ்சை பெரிய கோவில்
கொடும்பாளுர் மூவர் கோவில்
மேலக்கடம்பூர் திருவனந்தீஸ்வரர் கோவில்களில் பார்க்க முடியும்.
.
கோவிலின் அமைப்பு
கிழக்கு பார்த்து அமையப்பட்ட அழகான கற்கோவில், கோவிலின் முன்புறமாக மிகப்டபெரிய தெப்பக்குளம் இருக்கு அதன்கரையில் அழகாக அஞ்சாறு தென்னை மரம் பார்ப்பதற்கே அவ்ளோ அழகா இருக்கு. கோவிலுக்கு முன்பாக விழாக்காலங்களில் மக்கள் ஒன்று கூடும் விதமாக பெரிய மைதானம் இருக்கு. கிழக்கு பார்க்க அமையப்பட்ட கோவிலில் சிறிய நான்கு கால் மண்டபத்தில் பிரதோச நந்தியம்பெருமான் சுவாமியைப்பார்த்து உள்ளார். நந்தியைப் பார்த்தாலே மருதோதைய ஈஸ்வரமுடையார் எவ்வளவு பெரியவர் என்று யூகித்து விடலாம். தெற்கும் வடக்குமாக வழிகள் இருக்கு, படிகளும் கூட கலையுணர்வோடு அமைத்திருந்திருக்காங்க. நுழைவாயிலைக்கடந்து உள்ளே போனா மகாமண்டபத்தில் அழகழகாய்த் தூண்கள் இருக்கு, சுவாமியின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் முருகனும் உள்ளனர்.
மருதோதைய ஈஸ்வரமுடையார் சன்னதி
சதுர வடிவ ஆவுடையில் வட்டவடிவ சிவலிங்கம் இங்க மிக சிறப்பான ஒன்று. இங்கிருக்கும் சுவாமியைத் தரிசித்தாலே நம்மை அங்கேயே மெய்மறக்க வைக்கும் ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும். கோவிலின் உள்ளே அவ்வளவு பெரிய சிவலிங்கத்தை பார்க்கும் போது நம்முடைய உடலும் மனமும் அப்படியே லயித்துவிடுகிறது.
தாயார் சன்னதி.
இக்கோவிலின் தெற்கே சிவனேசவள்ளித் தாயாருக்கு தனி சன்னதி அமைத்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டு அந்நிய படையெடுப்பில் இக்கோவில் சிதைக்கப்பட்டு தற்போது அஸ்திவாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், மகாமண்டபத்திலேயே தெற்கு பார்த்து நின்ற கோலத்தில் அம்பாளின் விக்ரகம் இருக்கு. கையில் கிளியுடன் பார்க்கும் போது அவ்வளவு கருணை பொங்கும் முகம். கோஸ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, தட்சிணா மூர்த்தி இருந்தாங்க. கன்னிமூலையில் விநாயகரும், வடமேற்கில் சக்திவடிவேல் உருவத்தில் முருகப்பெருமானும் இருக்காங்க. இக்கோவிலைப் பற்றியும் சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் அடியார் திரு. கண்ணண் அவர்கள் சொன்னதை வீடியோ வடிவில் பார்க்கவும்.
சிறப்புகள்
இங்கிருக்கும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய்யில் மருத்துவ குணங்கள் இருப்பதாகவும், மாரடைப்பு உள்ளிட்ட வியாதிகளுக்கு மருந்தாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது,
ஞானத்தை வழங்கும் புதன் ஆதிக்கம் மிகுந்த கோவிலாக விளங்கிறது, இக்கோவிலை வணங்கிய பின்பு இவ்வூரின் அருகேயுள்ள குருவித்துறை குருபகவானை வழங்கும்போது முழுப்பலன்களையும் பக்தர்கள் பெருகின்றனர்.
மதுரை மாநகரின் வெளியே கிராமப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் இப்படியொரு கோவில் உள்ளது எனும் தகவலே பலர் அறிந்திருக்கவில்லை.
தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி