குளித்தலை கடம்பவன நாதர் திருக்கோவில்
அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு ஒரு நாள் லீவு கிடைச்சது, ஒரே நாளில் 4 சிவன் கோவில் தரிசனம் பண்ணலாம்னு நினைச்சு கிளம்பி பக்கத்தில் இருக்கும் கரூர், திருச்சி மாவட்டங்களில் இருக்கும் 3 பாடல் பெற்ற கோவில், 1 பராந்தக சோழன் பிரம்ப்பதி தோஷம் நீங்கப்பேற்ற சிவன் கோவில் பார்த்துட்டு வரலாம்னு கிளம்பியாச்சு, அய்யர்மலை வழியே போய் குளித்தலை கடம்பவன ஷ்வரை தரிசிப்போம் முதல்ல.
தேவாரப்பாடல் பெற்ற 276 தளங்களில் 65ஆவது பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர் இந்த கோவிலில் இருந்து தேவாரப் பதிகம் பாடியிருக்கிறார்.
காவிரி நதிக்கரைக்கு தென்கரையில் 127 உள்ள சிவ தலங்களில் இது இரண்டாவது சிவதலம் முதல் தளம் இதற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ரத்தினகிரீஸ்வரர் அப்படிப் பார்த்தா தென்கரையில் இருக்கக்கூடிய காவிரி கரைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய முதல் சிவாலயம் இந்த கடம்பவனநாதர் சிவாலயமாகும்.
இந்த ஊருக்கு குளித்தலை என பெயர் வந்ததற்கான காரணத்தை முதல்ல தெரிஞ்சுக்குவோம்.
காவேரியின் குளிர்ந்த அலைகள் கரையில மோதி மோதி காற்றில் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் இந்த இடத்திற்கு "குளிர்தண்அலை" என்றும், குழித்த சோலைகளை உடையதால் "குழித்தண்டலை" என்றும், சொல்றாங்க கல்வெட்டுகளிலும் கூட குளித் தண்டலை என்றுதான் இருக்கு.
கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை, கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும்,
பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உடைய தனித்துவம் இருக்கும் அதனால கொஞ்சம் பொறுமையா பதிவு பாருங்க
இந்தக் கோயிலைப் பற்றி சுவாரஸ்யமான அந்த தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க.
1.
கங்கை வடக்கு நோக்கிய சிவதலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார்.
தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி
இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும் பாவ நிவர்த்தி பெறுகிறான்.
2. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் கடம்பவன நாதரை இறைவனை வழிபட்டுள்ளனர்.
3. கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது.
இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர். சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம்.
4. முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள் சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக் கடம்பவனத்தை அடைந்தவுடன் அத்தோஷம் அவர்களை நீங்கியது. அன்று முதல் இன்றும் இறைவன் சன்னதியில் அவருக்குப்பின் நின்றுகொண்டு சதாகாலமும் அவரை வழிபடுவதைக் காணலாம் இது காரணமாக இத்தலம் சத்தியபுரியாகிறது.
5. சோமகன் என்ற அரக்கன் நான்கு மறைகளையும் களவாடி பாதாளம் சென்று மறைகிறான். உலகோர் பிரார்த்தனைக் கிணங்கி நாராயணன் இத்தலத்தை அடைத்து இறைவனைப் பூசித்து அவனருளால் மச்சாவதாரம் எடுத்து, அரக்கனை வதைத்து, நான்மறைகளை மீட்டு, இத்தலத்து இறைவனடியில் சமர்ப்பித்து, மீண்டும் உலகோர்க்கு அளிக்கிறார். இது காரணமாக இத்தலம் சப்தபுரி, வேதபுறி, என்றும் சதுர்வேதபுரி என்றும் பெயர் பெறுகிறது.
கடம்பவனநாதரூக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .
6. பிரமன் தன் படைப்புத் தொழிலில் அலுப்புக்கொள்கிறான். அரனிடம் தனக்கு இனிப் பிறவா வரம் வேண்டுகிறான். அரனோ தான் பூவுலகில் அகண்ட காவிரிக் கரையில் ஒரு புறம் சத்துவடிவமான மலையாகவும், ஒரு புறம் சித்துவடிவான மலையாகவும், இடையில் காவிரியில் தென்கரையில் ஆனந்த வடிவமாக அருளாட்சி செய்யும் இடத்தில் தன்னை அடைந்து, காவிரி நீர்கொண்டு அபிஷேக ஆராதனை செய்ய ஆக்ஞாபிக்க, பிரமனும் இத்தலத்தை அடைந்து பூசனை புரிந்து, அரனுக்கும், அம்மைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் ஆலயம் எழுப்பி, அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, நித்திய பூசனைகளைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான். அதனால் இத்தலம் பிரம்புரி என்ற பெயர் பெறுகிறது.
7. கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.
8. ராகு காலத்தில் பூஜை நடக்கும் சிறப்பு மிக்க கோவில்.
இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால், இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாள்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும் பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்துவைத்தால், திருமணத்தடை அகலும் என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்துவைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.
9. இத்திருக்கோயிலில் இரு நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.
10.முருகன் : சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார்.
கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: " விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் (ஐயர் மலைக்குச்) சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும்.
அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத் தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம். இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் " என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.
சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலமாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இங்கு விநாயகப் பெருமான் இடம்மாறி, மறுகோயில் உள்ளார்.
தைப் பூசத்திருவிழாவும், மாசி பிரம்மோற்சவப்பெருவிழாவும் முக்கியமானவை.
சிவன், தைப்பூசத்தன்று சப்த கன்னியர் இக்கு காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
தைப்பூசத்தன்று கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர்,
ரத்னகிரி கரும்பார் குழலி உடனுறை ரத்னகிரீச்வரர்,
ராஜேந்திரம் தேவ நாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர்,
பேட்டைவாய்த்தலை தேவநாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர்.
கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீச்வரர்,
திருஈங்கோய் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாலேசுவரர்,
முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீச்வரர்,
வெள்ளூர் சிவகாமியம்மை உடனுறை திருக்காமீச்வரர்
ஆகிய எட்டு ஊர் இறைவன் இறைவிகள் காவிரிக்கரையில் முகாமிட்டு, தீர்த்தவாரி கொடுத்து, அன்று இரவு அவரவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள அலங்காரப் பந்தலில் கொலுவீற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு காட்சி கொடுத்து அடுத்த நாள் அவரவர்கள் ஆலயம் செல்லும் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
காலையில் கடம்பரையும், உச்சியில் சொக்களையும் (ரத்னகிரீச்வரர்), மாலையில் திருஈங்கோய் மரகதாசலேச்வரரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிட்டும் என்று தலபுராணமும்; இவர்களுடன் அர்த்த சாமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரீச்வரரையும் தரிசனம் செய்தால் அளவற்ற பலன் கிட்டும் என்று காவேரி ரஹஸ்ய புராணமும் கூறுகின்றன.
மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும் தை மாதத்தில் பூசத் திருவிழாவும் மிகவும் சிறப்புப் பெற்றது.
கல்வெட்டு கூறும் விவரங்கள்: பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்-திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது
சப்தகன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன , பிரம்மா, மகாவிஷ்ணு
கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம்.
இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.
இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.
கோவில் அமைப்பு:
வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். கோஷ்டத்தின் பின்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருக்கிறார். வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர்.
இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது. கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
இத்தலத்தில் ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இச்சன்னதிக்கு முன்புறம் “பரமநாதர்’ காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.
‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்பது பொருந்தமேயாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்தவனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைத்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தலவிருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.
“காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” -என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே
No comments:
Post a Comment