![]() |
1000 ஆண்டுக்கு முற்பட்ட தொப்பேஷ்வரர் |
அமைவிடம்
திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் கோவிலூர் சென்று, R. கோம்பை எனும் ஊருக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ செல்ல வேண்டும். அங்கு நாயக்கனூர் எனும் சிற்றூர்க்கு கிழக்கே 1.5 கி. மீ தொலைவில் தொப்பைய சாமி மலைக் கோவில் அடிவாரத்தை அடையலாம்.
![]() |
3000 அடி உயர தொப்பைய சாமி மலை |
இருசக்கர வாகனங்களில் எளிதாக மாலை அடிவாரத்தை சென்றடையலாம். நான்கு சக்கர வாகனங்களில் நாயக்கனூர் வரையிலுமே சாலை வசதி உள்ளது. 20 நிமிட நேரத்தில் நடந்து அடிவாரம் சென்றடையலாம்.
![]() |
வனத்துறை அறிவிப்பு பலகை |
தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இம்மலைத் தொடர்கள் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும். அடிவாரத்தில் தொடங்கி கோவில் வரையிலும் அம்புக் குறி கற்களில் வரையப்பட்டிருக்கும்.
![]() |
மேல் நோக்கி செல்ல அம்புக்குறி |
கும்பைப்புளி கருப்பசாமி
அடிவாரத்தில் இருந்து நடக்கத் தொடங்கினால் சுமார் 30 நிமிட நேரத்தில் கும்பைப்புளி கருப்பசாமி கோவிலை அடையலாம்.
![]() |
கும்பைப்புளி கருப்பசாமி |
மலைப்பயணம் செல்வோர் இக்கோவில் கருப்ப சாமியிடம் முதலில் அனுமதி பெற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள பைரவர் பயணம் முடிந்து கீழே வரும் வரையும் உடன் வந்ததாக சொல்லும் பக்தர்களின் அனுபவம் ஆச்சர்யமானது.
![]() |
பைரவர் |
வெட்டிவேர், காட்டு எலுமிச்சை, காட்டு மல்லி, மலைக் கொய்யா, சரக் கொன்றை, மலைப்புளி, மலை முருங்கை மற்றும் அறிய பல மரங்களும் மூலிகைகளும் இம்மலையில் உள்ளதால் மிகவும் அமைதியான சூழலை அனுபவிக்கலாம். இயற்கையின் வாசத்தை உணரலாம்.
ஆகாய கங்கை அத்தி உறம்பு நீர் ஊற்று
மெல்ல மெல்ல மேட்டுப் பகுதிகள் ஆரம்பிக்கும் அடுத்த 30 நிமிட நடையில் ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் அத்தி உறம்பு நீர் ஊற்று (சுனை நீர்ப்) பகுதியை வந்தடையலாம்.
![]() |
சுனை நீர் ஊற்று |
இதனைக் குறிப்பிட நீர் என்று பாறைகளில் எழுதப்பட்டு இருக்கும். வலது புறத்தில் ஓடைக்கு செல்லும் பாதை மிகவும் சரிவான பாதையாக இருப்பதால் கவனமாக செல்ல வேண்டும்.
மலைப்பயணம் செல்லும் பக்தர்கள் இங்கு குடிநீர் அருந்தலாம். பாறைகளின் இடுக்குகளிலும், மரங்களின் வேர்களில் இருந்தும் சொட்டு சொட்டாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. வெயில் காலங்களில் சுனை நீர் வற்றி விடுகிறது. நீர் அருந்த காட்டு விலங்குகளும் வரும் என்பதால் கவனத்துடன் நீர் குடித்து விட்டு பயணத்தை தொடரவேண்டும்.
செங்குத்தான மேடுகளும் மிக ஆழமான பள்ளங்களும் தொடர்ச்சியாக மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். இரண்டு மலைகளைக் கடந்தால் தர்ப்பைப்புல் மற்றும் வெட்டிவேர் அதிகமாக உள்ள சாய்வான பகுதியை காணலாம்.
அமைப்பு
1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மையான சிவன் கோவில் மிக எளிமையாக திறந்த வெளியில் அமையப் பெற்றிருக்கும்.
![]() |
அடி முடி காண முடியாத ஐயனின் திருவடி |
சுயம்பு மூர்த்தி வடிவமான லிங்கத்தை பக்தர்கள் எடுத்து கட்டியுள்ளனர். காட்டு விலங்குகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் சுற்றிலும் வட்ட வடிவில் கற்களைக் கொண்டு அழகுற சுவர் போன்று 5 அடி உயரத்தில் கட்டியுள்ளனர். நுழை வாயிலில் குனிந்து செல்லும் வண்ணம் கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. இங்கு வீற்றிருக்கும் இறைவன் தொப்பேஷ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் சிலை கிடையாது.
சூட்சும நந்தி
சிவலிங்கத்தின் முன்பு அழகான நந்தி சிலை உள்ளது. இதன் வலது கால தூக்கிய நிலையில் காணப்படும். இவ்விடத்தில் அமர்ந்து வலது நாசி மூச்சு எனப்படும் சூரிய கலை தியானம் செய்ய எண்ணியது கைகூடும் என்பது சித்தர் வாக்கு.
![]() |
சூட்சும நந்தி |
முற்கால கலங்கரை விளக்கு போன்ற அமைப்புடைய பெரிய கம்பத்திலான விளக்கு அமைப்பு உள்ளது.
பெயர்க்காரணம்
இம்மலையில் தர்ப்பைப்புல் அதிகமா இருந்ததால் இங்கு சுயம்புவாக உதித்த சிவனை தர்ப்பேஷ்வரன் என்றும் காலப்போக்கில் தொப்பெஷ்வரர், தொப்பையசாமி என்றும் அழைக்கின்றனர். இறைவன் இம்மலையில் வீற்றிருப்பதால் தொப்பைய சாமி மலை என்றே அழைக்கப்படுகிறது.
சிறப்புகள்
வியாபார விருத்தி தரும் சிறப்புத் தலமாக விளங்குகிறது. கடைகள் வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் திருவண்ணாமலை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து மாதம் தோறும் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர்.
கடன் தொல்லை நீங்கிடவும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும் தொடர்ச்சியாக 5 பௌர்ணமி நாட்களில் வெண்மை நிற வஸ்திரம் சாற்றி, பாலபிஷேகம் செய்துவர நல்ல முன்னேற்றம் காணலாம்.
இக்கோவிலில் தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள், நாகாபரணம் மற்றும் பலவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
![]() |
சோலார் மின் விளக்கு |
விசேஷ நாட்கள்
அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வந்து சென்று வரலாம்
3000 அடி உயர மலை
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரமான கிழக்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது.
வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு மேகம் இறங்கி தவழ்வதையும் , கார்த்திகை மாதங்களில் பனியுடன் மழைபொழிவையும் இரசிக்கலாம்.
![]() |
மேகங்கள்,பனி மற்றும் மழை பெய்யும் காட்சி |
பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைப்பவர்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து சென்றால் போதும் 2 கிலோ அளவுள்ள பொங்கல் செய்யும் பாத்திரங்கள் அங்கே கோவில் பக்தர்களால் வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம்மலையின் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஊர்களான பாலவிடுதி கடவூர் மற்றும் அதன் கிழக்கே மணப்பாறை வரையிலும் இம்மலைக்கு தெற்கே அய்யலூர் மலைப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்தும் தொடர்ச்சியாக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இடி விழுந்த பள்ளம்
இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய ஆழமான பகுதி உள்ளது இங்கு எக்காலத்திலும் வற்றாத இடிவிழுந்த பள்ளம் என்று அழைக்கப்படும் ஓடையில் சுனைநீர் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். பொங்கல் வைக்க மற்றும் குடிநீர் தேவைக்காக இந்நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
![]() |
இடி விழுந்த பள்ளம் |
இம்மலைக்கு கிழக்கே இடைய பட்டியில் நம்மாழ்வார் ஐயா அவர்களின் வானகம் எனும் இயற்கை விவசாயப் பயிற்சி மையம் உள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
ஜெகதீசன் 9962909225
முருகேசன் 9087564080
குறிப்பு
பகல் நேரத்தில் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு
கோடைக் காலங்களில் சுனை நீர் வற்றி விட வாய்ப்புண்டு தண்ணீர் தேவையான அளவிற்கு எடுத்து செல்ல வேண்டும். (இடி விழுந்த பள்ளத்தில் தண்ணீர் கிடைக்கும்
மலைக்கோவிலுக்கு சென்ற முன் அனுபவம் மிக்க ஒருவருடன் செல்வது நல்லது.
சிவாலயங்களை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்...🙏