Saturday, October 2, 2021

தீண்டாக்கல் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோவில்

 தீண்டாக்கல்  அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோவில்



திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா, கூடலூர் பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் 55கிமீ துரத்தில் கூடலுர் எனும் ஊருக்கு கிழக்கே அருகே 4கிமீ தூரத்தில் தீண்டாக்கல் மலைக்கோவில் அமைந்துள்ளது. 

திண்டுக்கல்லி்ல் .இருந்து வருபவர்கள் வெள்ளப்பாறை எனும் இடத்தில் இருந்தே நேரடியாக வந்து விடலாம், கரூரில் இருந்து வருபவர்கள் கூடலூர் வந்து கிழக்கே வரவேண்டும். மலைக்கோவில் அடிவாரம் வரைக்கும் பைக், கார், பஸ்ஸில் வரலாம்.

Google Map Location : https://goo.gl/maps/jG3xHCaBdQfHBK19A


தீண்டாக்கல் - கூடலூர்

   இம்மலைக்கோவில் அமைந்திருக்கும் ஊரின் வடமேற்கே கொங்கு நாடு உள்ளிட்ட சேர நாடும், கிழக்கே  சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய மூன்று பெரும் பேரரசர்களும் சந்திக்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க மையத்திலே ஊராக இருந்ததால் கூடலுர் என பெயர் இருந்துள்ளது. பாண்டியர்களின் படைவீரர்கள் தங்குவதற்கும் தங்களின் எல்லைப்பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் பெருவழிப்பாதையின் இவ்விடத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.  இந்தப்பகுதியினை சுற்றிலும் பல சிவாலயங்களையும் எழுப்பியுள்ளனர்.

 

    கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த “பாண்டியன் பராங்குசன்  காலத்தில் தீண்டாக்கல் வீரபாண்டடீஸ்வரர் கோவிலும் அருகேயுள்ள கூடலூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கட்டி திருப்பணி செய்துள்ளனர். கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தற்போது முழுதும் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.

    கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் கங்க அரசனை வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் கப்பம் கட்டினார்கள் என வேள்விக்குடிச் செப்பேட்டிலும், பராங்குச பாண்டியரின் திருப்பணிகள் குறித்து திருப்பாண்டிக் கொடுமுடி கோவில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் ரணதீரன் மகனான பராங்குசன் தனது பாட்டனின் பெயரான “அரிகேசரி” எனும் பெயரை பட்டமாகவும் பெற்றிருந்தான். மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.

    பெருவழியாகப் பயண்படுத்திவந்த இப்பாதையில் தீண்டாக்கல் மலையை பாண்டியர்களின் எல்லை என்பதை தெரிவிக்கவே தீண்டாக்கல் என பெயர் வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஊரின் கிழக்கே மதில்கரை என்றழைக்கப்படும் மதுக்கரை எனும் ஊரும் அகலமான கற்சுவரும் காண முடியும்.  

 

    பாண்டியர்களின் எல்லைப் பகுதியில் இதுபோல பல கோவில்கள் எழுப்பியுள்ளனர்.  தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் வீரபாண்டீஸ்வரர் என்று பெயர் வைத்ததைப்போல தீண்டாக்கல் மலைமேல் இருக்கும் சுவாமிக்கு வீராபண்டீஸ்வரர் என்றழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 

மலை அமைப்பு 

    மலை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல படி அமைப்பு வைத்துள்ளனர். சுமார் 15 நிமிட நேரத்தில் நடந்து மேலே போய்விடலாம். மலைக்கு மேலேயிருந்து சுற்றியுள்ள 5கிமீ தொலைவு அனைத்து பகுதிகளையும் எளிதா பார்க்கும்படி அமைந்துள்ளது. மேலே ஒரு கண்காணிப்பு கோபுரம் போல ஒரு இடமும் இருக்கு, இங்கிருந்து நான்கு பக்கங்களிலும் மிகத் துல்லியமாக பார்க்கும் வகையில் அமைத்துள்னர். இதே போல அமைப்பு திண்டுக்கல் மலைக் கோட்டையில் உள்ளது.

கோவில் அமைப்பு

    கோவிலின் சுவர்கள் கற்களாலும் விமானம் செங்கற்களால் கட்டப்பட்டு இருக்கு விமானம் அறுங்கோன வடிவத்தில் இருக்கு, இக்கோவில் கட்டும் முன்பே ஒரு மாதிரி வரைபடம் செதுக்கி வைதிருக்காங்க. இதை கோவிலின் வடமேற்கில் பின்புறமாக கோட்டுப் படங்களாக வரைந்து வைத்துள்ளனர்.

 

    கோவிலுக்கு வெளியில் விநாயகர் சன்னதி, தெற்கு பார்த்து தட்சிணா மூர்த்தி சுவாமியும் உள்ளனர். கோவிலுக்கு வடக்கு பகுதியில் முருகன் மற்றும் சண்டேஸ்வரர் சன்னதியும் இருக்கு. இந்த பிரகாரத்தில் வேறு வேறு காலங்களில் செய்வித்த கட்டுமானங்களை காண முடிகிறது. 

    கிழக்கு பார்த்து அமைந்திருக்கும் வீரபாண்டீஸ்வரர் சிவன் கோவிலுக்கு நுழை வாயில் தெற்கு பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இதே போல திருச்சி மாவட்டம் முசிறி பக்கத்தில் மரகதாசலேஸ்வரர் கோவிலும் அமைக்கப் பட்டிருக்கும்.

     பொதுவாக மூலவரில் இடது பக்கம் முருகனும், வலது பக்கம் விநாயகரும் அமைக்கப் பட்டிருக்கும், ஆனா இக்கோவிலில் மட்டும் மிக அரிதான அமைப்பில் வலது பக்கமாக மிக சிறிய அமைப்பில் இரட்டைப் பிள்ளையார் இருக்கும்.

     கோவிலின் அர்த்த மண்டபத்தில் மேலே இரட்டைக் கயல் சின்னங்களை புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளனர். அம்பாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் மீனாட்சி அம்பாள் போன்ற வடிவத்தையும் கொண்டு அருள்பாளிக்கிறார். கிழக்குப் பார்த்து மூலவர் வீர்பாண்டீஸ்வரர் அமைந்திருக்கிறார். பெரிய அமைப்புடைய வட்ட வடிவ சிவலிங்க திருமேனி இருக்கு. கருப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் வீர பாண்டீஸ்வரர் அமைந்துள்ளார். மகா சிவராத்திரி நாட்கலில் லிங்கத் திருமேனி மேல சூரியனின் கதிர்கள் விழும்படி கட்டிடம் கட்டியுள்ளனர்.

     கோவிலின் வெளியே கிழக்கு பகுதியில் உயரமான விளக்குத் தூண் கொடிமர அமைப்பில் இருக்கு. இக்கொடிமரம் பழங்கால அமைப்பில் விளக்கு ஏற்றும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கு. மன்னர் ஆட்சிக் காலத்தில் சிறிய கலங்கரை விளக்கு போல பயன்படுத்தியுள்ளனர். கொடிமரத்தை சுற்றிலும் நந்தி, விநாயகர், பசுபதீஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் பொறித்துள்ளனர். கொடிமரத்தின் மேல்புறம் உள்ள காலத்தால் மிக முற்பட்ட நந்தியாக இருக்கு, பெரிய நந்தி. திறந்த வெளியில் வைத்திருந்தாலும் நந்தியின் அழகும் வெகு சிறப்பாக இருக்கும்.  இதே போல நந்தி அமைப்பை இவ்வூருக்கு வடக்கே வெள்ளியனை வெள்ளியம்பலேஸ்வரர் கோவிலிலும், தெற்கே மீனாட்சி சுந்தரேஸ்வரர், காளேஸ்வரர் கோவில்களிலும் பார்க்கமுடியும்.

கோவில் தோ் 

    மலையின் அடிவாரத்தில் பராமரிப்பின்றி இருக்கும் மிகப்பெரிய தோ் பார்க்க முடியும். தேரில் அழகிய வேலைப்பாட்டுடன் சிலைகளையும் காணடமுடியும். மிகப்பெரிய தோ் சக்கரங்களும், அச்சுகளும் இக்கோவிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தேர் அமைக்கப்பட்டு, கோவில் திருப்பணியும் செய்துள்ளனர்.  . 1918 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் சுதந்திரம் அடைந்த பின் 1967 ஆம் ஆண்டும் விழா எடுத்து தோ் இம்மலையைச் சுற்றி வந்ததாக தெரியவருகிறது. இக்கோயிலுக்கு விழா நாட்களில் உற்சவர் உலா வரும் வாகனங்கள் மலைக்கு மேற்பக்கத்தில் ஒரு ஓட்டு வீட்டில் வைத்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் காலப்போக்கில் சேதமடைந்துவிட்டது.

 

    பராமரிப்பு மற்றும் வழிபாடு குறைந்திருந்த இக்கோவிலை உள்ளுர் இளைஞர்கள், ஊர்ப்பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி செய்துள்ளனர். மலைக்கு மேல்வரையிலும் படிக்கட்டுகள் செதுக்கவும், கைப்பிடி அமைக்கவும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். பெளர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோவிலின் மேலேயே அன்னதானம் நடைபெறுவது இன்னும் விசேசமான ஒன்று. இக்கோவிலில் சமணர்கள் படுக்கைகளும் மலையின் வடக்கு பக்கம் காண முடிகிறது.

 கோவில் தரிசனம் செய்ய விரும்புவோர் மற்றும்  திருப்பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் திரு. ராஜலிங்கம் +91 72002 98816 அவர்களை தொடர்பு கொள்ளலாம். 


தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி...

சிவசங்கர் 

திண்டுக்கல்

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...