Sunday, February 6, 2022

முக்தீஸ்வரர் சிவாலயம், குன்னுவாரன் கோட்டை

முக்தீஸ்வரர் சிவாலயம்
குன்னுவாரன் கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, குன்னுவாரன் கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது.வத்தலகுண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து 11 கிமீ. தூரத்திலும் இந்த கோவில் அமைந்துள்ளது. வைகை நதியின் தெற்குப் பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. 
இந்த கோவில் பற்றிய குறிப்புகள் கிழக்கே 25 கி.மீ தொலைவிலுள்ள விக்கிரசோழமங்கலம் கோவில் சுவர்களின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆக,  காலத்தில் மிக முற்பட்டது என்றே நாம எடுத்துக் கொள்ளலாம். 

முக்தீஸ்வரர் கோவிலின் கருவறை அடித்தளம் மற்றும் நுழை வாயில் தான்  பார்க்க  முடிகிறது.

விக்கிர மங்கலம் கோவிலின் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வாணிபம் நடைபெற்றதாக உள்ள குறிப்புகளையும் வைத்து பார்க்கும் பொழுது இக்கோவில் 10 ஆம் நூற்றாண்டு அதாவது இன்றிலிருந்து சுமார் 1022 ஆண்டுக்கு முன்பே வழிப்பட்டில் இருந்தை உறுதிபட சொல்ல முடியும். மேற்கு பார்த்து அமைக்கப் பட்ட இக்கோவில் தற்போது ஒரு தென்னை தோப்பில் அமைந்துள்ளது. 

இந்த கோவில் காலப்போக்கில் பராமரிப்பு, படையெடுப்பு போன்ற காரணங்களால் மேற்கூரை மற்றும் கருவறை சுவர் சேதமடைந்த நிலையிலும் மூலவர் முக்திஸ்வரர் சிவலிங்கம் மட்டும் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து இன்னிக்குவரை இருந்திட்டு இருக்கு. உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இந்த சிவலிங்கத்தை மட்டும் எடுத்து முன்பக்கத்தில் ஆஸ்பெட்டாஸ் போட்டு நந்தியம்பெருமான் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த கோவிலின் தென்புற சுவற்றிலும், குமுத வரியிலும் இருக்கும் கல்வெட்டு செய்தி
கல்வெட்டு 1 : 
1)த்துக்கும் பலபடி ந(நி)மந்தங்களுக்கும் பதினெண்விஷையமும் மதுரமாந
2)கரமும் நாலு நகரமும் இட்டு (வீசி) வட்டை நடந்து சமையதன்மை (இனது) 
3)நடாத்துகின்ற பதினெண்விசையத்தோமும் அமைந்துடைத்துக்கு சே
4)த சாரிகையாவது கிழக்குப் (பேரம்) பொதிக்கு மதுரை உதைய ஈஸ்வரமுடை
5)யநாயனாற்குப் பொதிக்கு ஒருபுதுக்காசும் கண்ணுடை விண்ணகர எம்
6)பெருமாளுக்குப் பொதிக்கு அரைப்புதுக்காசும் இரண்டு பொருளுக்குங் கிழ
7)க்கு நோக்கிப் போகிற பொதிகளிலே கொள்வதாகவும் இப்படி சம்மதித்து
8) கல்வெட்டிவித்துக் குடுத்தோம் நான்கு திசைத் தெ...த் திசை ....... திசை

கல்வெட்டு 2 : 

1)னெண் பூமி முனை
2)து சந்திராதித்த
3)பூமித் தே...சி மாத
4)சமையக் கணக்கு
5)சய்ய ெ... து கல
6)பனான் சி மு(ல)த்தா

செய்தி : 
இந்த கல்வெட்டின் தொடக்க பகுதி தற்போதுள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தில் அபிராமி அம்மன் சன்னதியின் மேற்கூரையில் இடம்பெயர்ந்துள்ளதாக அறிய முடிகிறது. ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பாதையை வணிக பெருவழியாக அந்த காலத்தில் பயன்படுத்திருக்காங்க. கேரளா, கொடைக்கானல் பகுதியிலிருந்து குன்றுவராயன்கோட்டை, குருவித்துறை, விக்கிரமங்கலம் வழியாக, மதுரை மாநகருக்குச் சென்று வந்துருக்காங்க.
இந்த கிராமம் கெளுந்தம் எனும் சிறு வணிகப் பகுதியாக இருந்துருக்குதுங்க. கல்வெட்டில், நெற்குப்பை நாட்டு தேசி விளங்கு பட்டணம் கெளுந்தகத்திலிருந்து மதுரை உதைய ஈசுவரம் என உள்ளது. அதாவது இங்கிருந்து பதினெண் விஷயத்தார் என்ற வணிகக் குழுவினர் கிழக்கே செல்லும் போது, இக்கோவிலில் சில சுமைகளுக்கு ஒரு புதுக் காசும், சிலவற்றிற்கு அரை புதுக்காசும் வரியாக வசூலித்துள்ளனர். இதற்கான வசூலிப்பு மையம் இப்பகுதியில் இருந்துள்ளது. ஒரு புதுக் காசை சிவன் கோவிலுக்கும், அரைப் புதுக் காசை பெருமாள் கோவிலுக்கும் செலுத்தியுள்ளனர். 

தமிழகம் மற்றும் மற்ற வெளி தேசங்களில் வணிகம் செய்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்த பெரு வணிகக் குழுவினருக்கு பெயர்தான் பதினெண் விஷயத்தார்(பதினெட்டு நாட்டினர்). 13 ம் நூற்றாண்டு காலத்திலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு வரிகளுக்கு திரு. பொன் கார்த்திகேயன், ராஜவேல் மற்றும் சரவண மணியன் விளக்கம்  கொடுத்தனர். 


பிரதோஷ நாட்களில் அபிஷேகமும் அலங்காரமும் கோவில் அர்ச்சகர் திரு. வரதராஜ் ஐயா அவர்கள் வெகு சிறப்பா செய்து வருகிறார். பிரதோஷம் மற்றும் சிறப்பு நாட்களில் பூஜைகள் நடக்கிறது. 

விநோதமான தண்டனையும் சிலையும்

 கோவில் நிலைப்படிக்கு பக்கத்தில் இருந்த ஒரு அகலமான சுவற்றில் இருந்த சிற்பத்திற்கு பால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.  இந்த சிற்பத்தை உற்று நோக்கினால் கோவில்கள் எல்லாம் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் நீதியையும் அறநெறியும் தவறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனும் விதமாக கொடுஞ்செயல் புரிந்தவருக்கு யானையால் காலால் மிதித்து தண்டனை கொடுப்பது போலவும், அருகில் உள்ளோர் பார்த்து மகிழ்ச்சியில் ரசிப்பது போலவும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்திற்கு பிரதோஷ காலத்தின்போது பாலபிஷேகம் செய்யப்படுகிறது.


இங்கு வரும் பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை சுண்டல் பிரசாதமாக வழங்குகின்றனர். 

சேரர், பாண்டியர், சோழர் என மாபெரும் பேரரசர்கள் காலத்தில் இருந்த மாபெரும் நினைவுப் பொக்கிஷம் இன்னிக்கு கருவறையின் அடித்தளம் மட்டுமே எஞ்சி நிக்குது. முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் இருக்கும் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய நினைக்கும் யாரோ ஒருவர் கண்டிப்பா இந்த தகவலுக்காக காத்திருப்பார், கண்டிப்பா அவர்கிட்ட சொல்லுங்க "உங்களின் திருப்பணிக்காக இறைவனே காத்திருக்கிறார்" என்று, அந்த நோக்கத்திற்காக தான் நானும் இந்த வீடியோ பதிவு செய்திருக்கேன், நீங்களும் பார்த்துகிட்டு இருக்கீங்க என நம்பறேன்.  

கோவிலுக்கு செல்ல நினைத்தாலோ, அல்லது திருப்பணி செய்ய நினைத்தாலோ கோவில் பொறுப்பாளர்களின் தொலைபேசி எண் மற்றும் Google Map Location Description இல் குடுக்கிறேன். கண்டிப்பாக அனைவரும் போய் பார்த்து விட்டு வாங்க பார்த்தாலே முக்தி கொடுக்கும் முக்தீஸ்வரரை. 

மீண்டும் சந்திப்போம் மற்றும் ஒரு சிவாலய தரிசனத்தில். 

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி. 





No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...