Thursday, May 26, 2022

மேட்டு மருதூர் ஆராவமுதேஸ்வரர்

மேட்டு மருதூர் ஆராவமுதேஸ்வரர் என்ற நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் 

கரூர் மாவட்டம் குளித்தலைக்கு தென்கிழக்கே 8.5 கி.மீ தொலைவில் மேட்டுமருதூர் எனும் இவ்வூர் அமைந்துள்ளது.

ஊரின் வடகிழக்கு மூலையில் வயல்வெளியின் அருகே இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து அமையப்பெற்ற இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது..
திருக்கோவில் அமைப்பு :
இக்கோவில் பல்லவர்கள் காலத்தில் இருந்து வழிபாட்டில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்லவர்கள் காலத்திற்குப் பின் சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
Google Map Location
https://maps.app.goo.gl/xz1DQxAJE6TJ8XLa7 கோவில் கட்டுமானம்

கோவில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் என்ற மூன்று பிரிவுகளாக உள்ளது. தரைமட்டத்தில் இருந்து கருவறையும் முன்மண்டபமும் மூன்றரை அடி உயரத்தில் உள்ளது. சோபானம் எனப்படும் படிகள் அமைக்கப்பட்டுள்ளது.இது தற்காலத்தில் வைக்கப்பட்டுள்ளது
அர்த்த மண்டபத்தை நான்கு விஷ்ணு காந்த அரைத்தூண்களில் கலசம், தாடி, கும்பம், பாளி பலகை போன்ற பகுதிகளுடன் நிற்கிறது. நான்கு தூண்களில் மூன்று மட்டுமே கோவிலின் உள்ளேயுள்ளது. நான்காவது தூண் சேதப்பட்ட நிலையில் கோவிலின் வெளியே வடபுறத்தில் கீழே கிடக்கிறது.
கோவிலின் அதிட்டானம் எனப்படும் அடித்தளம் முதல் கூரைப்பகுதி எனப்படும் பிரஸ்தரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதிட்டானம் எனப்படும் அடித்தளம் பாதபந்த அதிட்டானமாக உள்ளது. பிரம்ம காந்த நாற்பட்டைகள் உள்ள தூண்கள் கலசம்,கும்பம், பலகை என்ற அமைப்புகளுடன் சுவரை தாங்கி நிற்கின்றன. தேவகோஸ்டம் எனப்படும் பகுதியும், கர்ணப்பத்தி என்ற கடைசி மூலையில் வருகின்ற கர்ணப்பகுதியும் இறுக்கமாகவுள்ளது. அதாவது சுவரின் மட்டத்தில் இருந்து கொஞ்சம் வெளிப்பக்கம் இழுத்தது போல் உள்ளது. கோஸ்டங்களுக்கு தனியாக அமைப்புகள் கொடுக்கப்படவில்லை.

பிரஸ்தரம் என்ற கூரைப்பகுதி கபோதக அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. நாசிக்கூடுகளில் மனிதன் அல்லது பூதங்களின் முகங்கள் பலவித முகக் கோணல்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நாசிக்கூடுகளின் கீழே சந்திரமண்டலம் எனும் அமைப்பு வட்டவடிவமாக அமைந்துள்ளது. பிரஸ்தரத்தின் ஒரு உறுப்பான வலதியில் பூதகணங்கள் நிறைய செதுக்கப்பட்டுள்ளது. பூதகணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சேஷ்டைகள் செய்வது போல இருப்பது தெளிவாகத் தெரிகிறது. விமானம் சோழர்காலத்தில் செங்கற்கால் கட்டப்பட்டுள்ளது. விமானம் இரண்டு தளங்களையுடையதாகவுள்ளது. விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துவிட்டதால் வேறு சிற்பங்களை காண இயலவில்லை.
இக்கோவிலின் சுவர் கற்கள் இறுக்கத்தனமின்றி இருப்பதால் சேதமடைந்து கொண்டே வருகிறது. கல்வெட்டுத்தகவல்கள் : இராஜராஜ சோழன் 21 வரி மெய்கீர்த்தியை கோவிலின் நுழைவாயிலில் காணலாம். இக்கல்வெட்டில்.

சாலை கலமறுத்த கோவி ராஜராஜகேசரி என்று குறிப்பிடுகிறது. இதை கேரளத்தின் விளிஞ்சம் கோட்டை மற்றும் காந்தளுர் சாலையில் நடைபெற்ற போரின் சிறப்பை விளக்கும் மெய்கீர்த்தியாக உள்ளது.
இராஜராஜசோழன் கல்வெட்டின் வாயிலாக சோழர் காலத்தில் இவ்வூர் மீய்கோட்டு நாட்டு மதான மருதூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள இறைவன் "நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் மற்றும் ஆரவமிதீஸ்வரர் என்றழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் இக்கல்வெட்டு சூரிய கிரகணத்தன்று நுந்தா விளக்கு எரிக்க நிலம் இக்கோவிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கிறது.

வழிபாடு ஊர்ப்பொதுமக்களில் சிலரும் , சில சிவனடியார்களும் ஒன்று சோ்ந்து தற்போது பிரதோசம், பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சிவராத்திரி, ஆருத்ரா, அன்னாபிசேகம் போன்ற விசேச நாட்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தினம்தோறும் திரு. அமர்நாத் ஐயா அவர்கள் பூஜை செய்து வருகிறார். சிறப்பான சிவலிங்கம்

ஆறரை அடி சுற்றளவுடன் எட்டு அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கம் கருவறை அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. இந்தப்பகுதியில் இதுவே மிகப்பெரிய சிவலிங்கம்.
பழங்கால நந்தியம்பெருமான் சிவனைப்பார்த்தவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

தொன்மை வாய்ந்த சிற்பங்கள் பல்லவர்காலத்திய ஜேஸ்டா தேவி எனப்படும் தவ்வை சிற்பத்தில் மாந்தன் , மாந்தியுடன் உள்ளதை தாண முடியும். பிரம்மாவின் சிற்பத்தையும் , சண்டிகேஸ்வரரின் சிற்பங்களையும் விநாயகர் சிற்பத்தையும் காணலாம். புதிய புதிய கோவில்கள் கட்டுவதையும் விட நம் முன்னோர்கள் தனக்குப்பின் வரும் சந்ததிகளும் ஆன்மீக நெறியில் பயணிக்க வேண்டும் என்று ஆகம விதிப்படியும் காலங்கள் கடந்து நிற்கவேண்டும் என்ற பொதுநலத்தோடு கட்டிவைத்த கோவில்களையும் உழவாரப்பணி மற்றும் திருப்பணி செய்து வழிபாடு செய்து வருவதே மிகச்சிறந்த ஆன்மீகப்பணியாகும். வெகு விமர்சகையாக தேர் இழுத்து திருவிழா நடந்ததாக சொல்லப்படும் இக்கோவிலில் சுற்றிவருவதற்குக் கூட 4 அடி பாதைகள் இல்லாத நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சுற்றுச்சுவர்களோ, வேலிகளோ இல்லாத நிலையில் தான் இக்கோவில் உள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட விமானத்தின் பகுதியானது காலப்போக்கில் தொடர்ச்சியான பராமரிப்பின்றி மழையின் பாதிப்பால் அரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. உழவாரப்பணிகள் செய்யும் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இக்கோவிலின் மேல் வளர்ந்திருக்கும் சின்னச்சின்ன செடிகளையும் முற்செடிகளையும் நீக்கி சுத்தம் செய்தும், பல்வர்கள் கால கோவில் பாழடைந்து விடாமல் பாதுகாத்துக் கொடுக்க பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். திருப்பணி செய்ய விரும்புவர்களும் வழிபாடு செய்ய விரும்புவர்களும் கீழ்க்காணும்தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அமர்நாத் :7010505011


Wednesday, May 18, 2022

கேரளா திருவள்ளம் பரசுராமர் கோவில்

இன்றும் கேரளா கோவில்களின் நகரம் என்றழைக்கப் படுவதற்கான முழு முதற் காரணம் பரசுராமர் என்றால் மிகையல்ல. பரசுராமர் தன் சாபம் நீங்க கேரளாவில் 105 சிவன் கோவில்களும் கர்நாடகாவில் 2 கோவில்களும், தமிழ்நாட்டில் 1 கோவிலிலும் வழிபாடு செய்தார். இதைத் தவிர பகவதி அம்மன் கோவில்களையும் வழிபாடு செய்கிறார். பரசுராமர்க்கும் ஒரு கோவில் இருப்பது சிறப்பான ஒன்று.   
திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் கடற்கரை செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் திருவள்ளா இக்கோவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் பரசுராமரின் சிலை தத்ரூபமாக உள்ளது.   
பரசுராமர் யார்?
பூமியில் எப்போதெல்லாம் அதர்மம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதாரம் எடுப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் தசாவதாரத்தில் போற்றுதலுக்குரிய ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.
அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவர் சிவனையே குருவாக ஏற்றுகொண்டதால் பரசுராமர் பக்திககு பரிசாக பரசு எனும் ஒருவகை கோடாரியை சிவன் அளித்திருந்தார். அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் 'பிரம்மா-ஷத்திரியர்' என்றே அழைக்கப்பட்டார்.அதர்மத்தின் வழி வந்த 21 தலைமுறை ஷத்ரியர்களையும் பரசுராமர் கொன்றழித்தார்.
இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது.
அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிட்டை செய்து தவம் செய்து தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.
இந்த சிவ லிங்கத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். 
ஆதி சங்கரர் தனது தாய் ஆரியாம்பாள்க்கு இக்கோவிலில் தான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். 
கரமனை ஆற்றில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கும் போது குளித்து வருவதற்கு படித்துறை அமைப்பில் உள்ளது. இப்படித்துறை கோவிலின் வலதுபுறம் உள்ளது. 
கோவிலின் முன்னே தர்ப்பணம் கொடுக்கும் சிறு மேடை உள்ளது. அதன் மேற்கே பெரிய அரசமரத்தில் நாகர் சன்னதியும் அய்யப்பன், பகவதியின் சன்னதியும் உள்ளது. 
கோவிலின் உள்ளே பரசுராமர் நின்ற கோலத்தில் அதி அற்புதமாக சிலை உருவத்தில் உள்ளார். பரசுராமர் வைத்து வழிபட்ட லிங்கம் தனி சன்னதியில் சிறப்புடன் இருக்கிறார். விஷ்ணுவுக்கும் அருகே சன்னதி உள்ளது. மிகச் சிறிய அளவிலான அழகான கோவில். 

வருடத்தின் 365 நாளும் தர்ப்பணம் கொடுக்கும் சிறப்பு மிக்க கோவில் இக்கோவில். ஒருவர் தர்ப்பணம் கொடுக்கும் போது அவரின் 21 தலைமுறைக்கும் சேர்வதாக ஐதீகம். 
பரசுராமர் ஜெயந்தி விழா டிசம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
பாண்டியர்கள் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் அரிதான முறையில் கருங்கற்களால் இக்கோவில் கட்டியிருப்பது சிறப்பு. 
இந்த பாரம்பரிய கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் (Asi) கட்டுப்பாட்டில் உள்ளது. 

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...