Wednesday, May 18, 2022

கேரளா திருவள்ளம் பரசுராமர் கோவில்

இன்றும் கேரளா கோவில்களின் நகரம் என்றழைக்கப் படுவதற்கான முழு முதற் காரணம் பரசுராமர் என்றால் மிகையல்ல. பரசுராமர் தன் சாபம் நீங்க கேரளாவில் 105 சிவன் கோவில்களும் கர்நாடகாவில் 2 கோவில்களும், தமிழ்நாட்டில் 1 கோவிலிலும் வழிபாடு செய்தார். இதைத் தவிர பகவதி அம்மன் கோவில்களையும் வழிபாடு செய்கிறார். பரசுராமர்க்கும் ஒரு கோவில் இருப்பது சிறப்பான ஒன்று.   
திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் கடற்கரை செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் திருவள்ளா இக்கோவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் பரசுராமரின் சிலை தத்ரூபமாக உள்ளது.   
பரசுராமர் யார்?
பூமியில் எப்போதெல்லாம் அதர்மம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதாரம் எடுப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் தசாவதாரத்தில் போற்றுதலுக்குரிய ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.
அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவர் சிவனையே குருவாக ஏற்றுகொண்டதால் பரசுராமர் பக்திககு பரிசாக பரசு எனும் ஒருவகை கோடாரியை சிவன் அளித்திருந்தார். அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் 'பிரம்மா-ஷத்திரியர்' என்றே அழைக்கப்பட்டார்.அதர்மத்தின் வழி வந்த 21 தலைமுறை ஷத்ரியர்களையும் பரசுராமர் கொன்றழித்தார்.
இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது.
அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிட்டை செய்து தவம் செய்து தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.
இந்த சிவ லிங்கத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். 
ஆதி சங்கரர் தனது தாய் ஆரியாம்பாள்க்கு இக்கோவிலில் தான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். 
கரமனை ஆற்றில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கும் போது குளித்து வருவதற்கு படித்துறை அமைப்பில் உள்ளது. இப்படித்துறை கோவிலின் வலதுபுறம் உள்ளது. 
கோவிலின் முன்னே தர்ப்பணம் கொடுக்கும் சிறு மேடை உள்ளது. அதன் மேற்கே பெரிய அரசமரத்தில் நாகர் சன்னதியும் அய்யப்பன், பகவதியின் சன்னதியும் உள்ளது. 
கோவிலின் உள்ளே பரசுராமர் நின்ற கோலத்தில் அதி அற்புதமாக சிலை உருவத்தில் உள்ளார். பரசுராமர் வைத்து வழிபட்ட லிங்கம் தனி சன்னதியில் சிறப்புடன் இருக்கிறார். விஷ்ணுவுக்கும் அருகே சன்னதி உள்ளது. மிகச் சிறிய அளவிலான அழகான கோவில். 

வருடத்தின் 365 நாளும் தர்ப்பணம் கொடுக்கும் சிறப்பு மிக்க கோவில் இக்கோவில். ஒருவர் தர்ப்பணம் கொடுக்கும் போது அவரின் 21 தலைமுறைக்கும் சேர்வதாக ஐதீகம். 
பரசுராமர் ஜெயந்தி விழா டிசம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
பாண்டியர்கள் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் அரிதான முறையில் கருங்கற்களால் இக்கோவில் கட்டியிருப்பது சிறப்பு. 
இந்த பாரம்பரிய கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் (Asi) கட்டுப்பாட்டில் உள்ளது. 

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...