Friday, September 29, 2023

பருத்திக் காட்டுக்குள் பல்லவர்கள் கால 32 பட்டை சிவலிங்கம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டம், அபிவிருத்தி ஈஸ்வரம் அருகே திடல் எனும் கிராமத்தில் பருத்திக்காட்டிற்குள் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த 32 பட்டைகளை உடைய சிவலிங்கம் வழிபாடு இன்றி மண்ணில் புதையுண்டு இருந்தது.  இது பற்றிய விவரம் முகநூலில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சிவ முத்துராமன் அவர்கள் பகிர்ந்திருந்தார். தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் மேற்கூரையுடன் திருப்பணி செய்து தருவதாகக் கூறினோம்.

சிவலிங்கத்தின் ஆவுடை சேதமடைந்து இருப்பதால் பழைய ஆவுடையின் அமைப்பைப் போலவே 2½ அடி சுற்றளவில் ஆவுடையும்,  2 அடி உயர நந்தி மற்றும் பலிபீடம் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் தயார் செய்யப்பட்டது.  27.9. 2023 பவுர்ணமி திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்யப்பட்டு, 20x11 என்ற அளவில் மேற்கூரை அமைத்து தரப்பட்டது. 


அதிசயமான 32 பட்டை வடிவ சிவலிங்கம்

சிவலிங்கங்கள் பொதுவாக 2 பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். நேராக நிற்கக்கூடிய லிங்க பானம் மற்றும் அபிஷேக நீர் வெளியேறும் அமைப்புடைய ஆவுடை.

 இதில் லிங்க பானம் என்பது முழு நீளத்தை 3 ஆக பிரித்து அமைக்கும் வழக்கம் (30:30:40 & 30:35:35 & 25:35:40) உள்ளது.கீழிருந்து மேலே  
🕉️  முதல் பாகம் -பிரம்மம் (4 பட்டை)
🕉️ இரண்டாம் பாகம் - விஷ்ணு (6/8 பட்டை)
🕉️மூன்றாம் பாகம் - ருத்ரம் (உருளை வடிவில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன்) அமையப் பெற்றிருக்கும். இவற்றில் விதி பிரம்ம பாகம் என்பது பிரதிட்டை செய்யும் தரைப்பகுதியில் இருந்து கீழும், விஷ்ணு பாகத்தில் ஆவுடை பொருந்தியும், ருத்ர பாகம் மட்டும் நம் கண்களுக்கு தெரியும் பகுதியாகும்.

ஆவுடை - சதுரமாகவோ, சதுரத்திற்குள் வட்டமாகவோ, வட்ட வடிவிலோ (விரிந்த) மேல் பாதி, கீழ் பாதியாகவோ (குவிந்த) இருக்கலாம் அல்லது ஒரே கல்லில் செய்யப்பட்டும் இருக்கும். 

இவற்றில் எல்லாம் சற்று மாறுபட்டு பட்டைகளை உடைய சிவலிங்கம் தாரா லிங்கம் என்றழைக்கப்படுகிறது.

🕉️4 பட்டை - வேதலிங்கம்
🕉️8 பட்டை - அஷ்ட தாரா லிங்கம்
🕉️16 பட்டை - சோடஷ லிங்கம்
🕉️32 பட்டை - தர்மதாரா லிங்கம்
🕉️64 பட்டை - சிவ லீலா சமர்த்த லிங்கம் ஆகும். 

பட்டை வடிவிலான சிவலிங்கங்கள் 8- 9 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களால் எடுக்கப்பட்ட ஆலயங்களில் காணமுடிகிறது. 

32 தர்மங்களையும் செய்த புண்ணியங்களைத் தரவல்லது என்பதால் "தர்மதார லிங்கம்" எனும் சிறப்பு பெறுகிறது. 

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...