Tuesday, September 7, 2021

8 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது

திருக்காளேஸ்வரர் கோவில்


முழு வீடியோ தொகுப்பு

வரலாற்று சிறப்பு மிக்க 8, 12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் கற்றளி சிவன் கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டது.



 அமைவிடம் :

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை கிராமம், குடிவெண்டை எனும் சிற்றூர் அருகே  மலைக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.


செல்லும்வழி

திண்டுக்கல் – கரூர் செல்லும் வழியில் குஜிலியம்பாறைக்கு கிழக்கே மணப்பாறை செல்லும் சாலையில் 4 கிமீ தொலைவில் சேவகவுண்டச்சிபட்டி குடிவெண்டை கிராமங்களுக்கு அருகே உள்ள ஒரு மலைக் குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.


ஈஸ்வரன் பாறை என்றழைக்கப்பட்ட இச்சிறிய பாறையின் மீது இருந்த கல்மண்டபம் பெருமாள் கோவில் என்றழைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்தது. பின்னர் இக்கோவிலை நானும் நண்பர் திரு. ஜெகதீஸ் அவர்களும் பார்வையிட்டு கல்வெட்டு  செய்திகளில் சொல்லப்பட்ட விபரங்களை திரு. பொன் கார்த்திகேயன் என்பவரிடம் கேட்டுப் பெற்றோம்.

 

கற்றளி கோவில்

ஒரு தள அமைப்புடைய கற்றளி கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையின் விமானம் முழுதும் சேதமடைந்து உள்ளது. அர்த்த மண்டபம் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. மேல்தளத்தில் கிளுவை மரம் ஒன்று முளைத்து கட்டிடத்தை சிதைத்து வருகிது.  பாறையின் மீது சமதள அமைப்பை தோ்வு செய்து கிழக்கு பார்த்து மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மக்களின் தொடர்ச்சியான கவனிப்பின்மையால் சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.


 கற்கோவிலானது அழகிய வேலைப்பாடுகளுடன் மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறையைச் சுற்றிலும் உள்ள கோஷ்டங்களில் சிலைகள் இல்லை.  5 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாண்டியர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்துள்ளனர். பீம் அமைப்பும் அதில் அழகிய பூக்கள் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியும் கோவிலின் உடைந்த பாகங்களைக் காணலாம். கோவிலைச் சுற்றிலும் அக்கால செங்கற்களையும் ஓடுகளையும் காண முடிகிறது. 



நந்தி

மலைக்குக் கிழக்கே பொிய அளவிலான நந்தி தலை இல்லாமல் உள்ளது. மலைக்கு மேலேயிருந்து யாரோ உருட்டி விட்டதன் விளைவாக  நந்தி சிலை சேதப்பட்டுள்ளது. புலித்தோல் போர்த்திய அமைப்பில் மிக அழகாக உயிர்ப்புடன் நந்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உடல் பகுதியை தொட்டுப் பார்க்கும் போது பசுவைத் தொடும் உணர்வு ஏற்படுகிறது. 


தீர்த்தக்குளம்

கோவிலின் மேற்கு பக்கம் இரண்டு சிறிய தண்ணீர்ப்பாளிகள் உள்ளன. சிறிய பாளியில் இருந்து கோவிலின் அபிஷேகத்திற்கும் பொிய பாளித் தண்ணீர் பொது மக்களின் பயன்பாட்டிற்கும் இருந்துள்ளது. 

 

கல்வெட்டு செய்திகள்

கோவிலின் கிழக்கே செவ்வகவடிவில் 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.


இப்பகுதி குறுநில மன்னன் பாண்டி அரட்டவதி அரயனின் தாயார் பாண்டிப் பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக காள ஈஸ்வரம் என்ற இக்கோவிலைக் கட்டியாதாக எழுதப்பட்டுள்ளது. கடைசியாக இக்கோவிலைக் காப்பவர்களின் பாதங்களை என் தலைமேல வைத்து தாங்குவேன் என - "இது காத்தாரடி என்றலை மேலென" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.


கோவிலின் மேற்கு மற்றும் தெற்கு பக்க குமுத வரிகளில் உள்ள கல்வெட்டில்


சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தட்டையூர் நாட்டில் இக்கோவில் இருந்ததாகவும், திருக்குன்றத் தளியுடைய நாயனார் என்று இங்குள்ள சிவனுக்கு பெயர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பூசைக்கு வழங்கப்பட்ட நிவந்தம் பற்றியும் இந்த தானமானது சந்திரர் சூரியர் உள்ளவரை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோவிலின் கிழக்கே தூண்கல் அமைப்பிலான கல்வெட்டில் செய்திகள் 


இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட மானியம் பற்றியும் சண்டேஸ்வரர் சன்னதி இருந்ததையும் சிவப் பிராமணர்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்த கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாண்டியர்களால் எட்டாம் நூற்றாண்டில் செங்கற்களால் செங்கற்றளியாக கட்டப்பட்ட இக்கோவிலானது 12 ஆம் நூற்றாண்டின் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளி கோவிலாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.  மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

அபூர்வ சிவலிங்கம்

📌 தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட  இக்கோவிலில் 8 பட்டை வடிவிலானஇ ருத்ர பாகம் மட்டுமே இருக்கும் அபூர்வ வடிவான சிவ லிங்கமும் புதையுண்டு இருந்ததை குஜிலியம்பாறையைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவசுப்பிரமணியன் (பஞ்சர் பாலு) தலைமையில் காய்க்காரர் முருகேசன், ஜெகதீஸ், நாகலட்சுமி, ஆகியோர்கள்  முட்புதர்களை அகற்றி உழவாரப்பணி செய்து கண்டறிந்தனர். இதே போன்ற அமைப்புடைய சிவலிங்கம் நேபாளம் மற்றும் இலங்கையில் மட்டுமே உள்ளது.






09.05.2021 முதல் பிரதோஷ வழிபாட்டுடன் தொடர்ந்து வழிபாட்டில் இக்கோவில் இருந்து வருகிறது.

தேவர்மலை பஞ்சாயத்துக்குட்பட்ட ஊர்ப் பெரியவர்கள், தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஒன்று கூடி ஒவ்வொரு பிரதோஷம், பெளர்ணமி மற்றும் விசேச நாட்களில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

 குஜிலியம்பாறை ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் சோலார் விளக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இக்கற்றளிக் கோவிலையும், கல்வெட்டுகளையும் வரலாற்று ஆய்வாளர்களும்,  பேராசிரியர்களும்,  மாணவர்களும் பார்வையிட்டு செல்கின்றனர்.

 வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளைப் பற்றியும் நம் முன்னோர்களின் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, வீரம், தெய்வ வழிபாடு இவைகளை காப்பாற்றுவதுடன் அடுத்த தலைமுறைக்கு சொல்லி வைப்பதும் நம் கடமையே.

 📌 நம் குழந்தைகளையும், பள்ளி கல்லூரி மாணவர்களையும் அழைத்து வந்து கற்றளியையும், தமிழ் மொழியின் பழங்கால வட்டெழுத்து கல்வெட்டுகளையும் காண வைப்போம்.

🔥 "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" எம் தமிழ்க்குடி எனும் பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்.

ஆள் அரவமற்ற மலைப்பகுதியில் இன்று தினம்தோறும் மக்கள் வருவதையும், பிரதோஷ பூஜை, பெளர்ணமி நாட்களில் சுமார் 600 பேருக்கும் குறைவில்லாமல் வந்து செல்வதைக் காணும் போது பாண்டிப் பெருந்தேவியின் வரிகளே நினைவுக்கு வருகிறது. இக்கோவிலைக் காப்பவர்களின் பாதங்களை என் தலைமேல வைத்து தாங்குவேன் என  நினைத்தவரின் ஆன்மாவும் கூட இக்காட்சியைக் காண தவம்தான் இருந்திருக்குமோ என...

 

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி.

 

அன்புடன்

சிவசங்கர் 

Mobile No : 9976913310

திண்டுக்கல்

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...