அருள்மிகு சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர்மகாதேவர் உடனுறை மணோன்மணியம் அம்பாள் திருக்கோவில்
முழு வீடியோ தொகுப்பு
கருர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா சோமூரில் இருக்கு, கருரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோவிலுக்கு கரூரில் இருந்து பேருந்து வசதி இருக்கு கார், பைக் மூலமாகவும் சென்றடையலாம்.
Google Map Location https://maps.google.com/?cid=11772520941510456107&entry=gps
கோவிலின் அமைப்பு
இக்கோவில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளுக்கு இடையே மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சோமூரின் தென்மேற்கு பகுதியில் மரங்கள் மற்றும் தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் கருவறை சிறிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் பெரிய அளவுடையதாகவும் இருக்கும் ஆனால் இந்தக்கோவலில் மட்டும் கருவறை பெரிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் சிறியதாகவும் அமைத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் அமைப்பில் இரண்டு மிகப்பெரிய துவார பாலகர்கள் அர்த்த மண்டபத்தின் வாயிலில் வைத்துள்ளனர். இரண்டும் பார்க்க ஒரே அமைப்பாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையிலே சின்னச்சின்ன மாற்றங்களைப் பார்க்கலாம். இவர்களின் காதுகளில் குணடலங்களும், கைகளில் மோதிரங்கள், வளையல்கள் மற்றும் கீர்த்தி முக கவசங்களும் அலங்கரிக்கின்றன. கண்டிகை, சாவடி மற்றும் கல் பதிக்கப்பட்ட மாலை ஆகியன அவர்களின் கழுத்தை அலங்கரிப்பதையும் பார்க்க முடியும்.
ஆலயச் சுவரின் வெளிப்பகுதியில் காணப்படும் தூண்களில் தாடி, பலகை, குடம் ஆகியன மிக நோ்த்தியாக காணப்படுகிறது. கோவில் சுவர் மீது அமைக்கப்பட்டுள்ள கபோத அமைப்பிலுள்ள பிரஸ்தரம் என்ற கூரையின் விளிம்பில் பூதவரி, கொடுங்கை, யாளிவரி என்ற மூன்று பகுதிகளும் தெளிவாகவும் நோ்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பூதவரியானது கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றில் பிரஸ்தரம் முழுவதும் அமைந்துள்ளது. இசைக்கருவிகளை வாசிப்பது போலவும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போலவும், நடனமாடுவது போலவும் பூதகணங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பூதகணங்கள் பேசுவது போல சிறப்பாக வடித்துள்ளனர். யாளிவரிகளில் யாளிகள் பிரஸ்தரத்தின் முழநீளத்திற்கும் காட்சியளிக்கின்றன.
கோவில் மேல்தளத்தில் நான்கு நந்தி
கருவறையின் பிரஸ்தரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு அழகிய நந்தி சிலைகளை காண முடிகிறது. இத்தகைய அமைப்பு இப்பகுதியிலுள்ள வேறு சிவாலயங்களில் இல்லை. முற்காலத்தில் ஆலயம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் சிவன் கோவில் என்பதை பார்த்தவுடன் உணர்த்தும் விதம் இத்தகைய நந்திகள் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் இந்த நந்தியின் சிலையை சுற்று மதில்களில் அமைக்கும் வழக்கம் வந்தது.
இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போல ஸ்தூல லிங்க அமைப்பைப் போல அமைத்துள்ளனர். கோவிலின் உச்சி கோபுரம் வரையிலும் லிங்க அமைப்பிலும் மையத்தில் மேற்கு நோக்கி வட்டவடிவ சிவலிங்கத்தை அமைத்துள்னர். முற்காலத்தில் கற்கோவிலாகவும் விமானம் செங்கற்களால் கட்டியும் , காலப்போக்கில சேதமடைந்ததால பிற்காலத்தில் திருப்பணி செய்துள்ளனர்.
மூலவருக்கு வலது இடமாக இருக்க வேண்டிய விநாயகர் முருகர் சிலைகளுக்கு பதிலாக பெரிய அளவில் ஒரு விநாயகர் சிலை மட்டும் இருப்பது சிறப்பு. அர்த்த மண்டபத்திலேயே மனோண்மனி அம்பாள் உள்ளார். இக்கோவிலில் தனித்தனி பிராகாரங்கள் இல்லாததால் 2010 ஆம் ஆண்டு விநாயகர், முருகன், நால்வர், அம்பாள், நவக்கிரகம் வைக்க கட்டிடப்பணிகள் செய்தனர், 90 சதவீதம் வேலை முடிந்துவிட்டது, ஆனாலும் திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க இயலவில்லை.
இங்கிருக்கும் நந்தி வலது பக்கமாக சாய்ந்த அமைப்பில் சோமேஸ்வரரை தரிசிப்பது போல பெரிய அமைப்பாக உள்ளது. கொஞ்சம் மேற்காக வராகி அம்மன் சிலை மற்றும் மகேஷ்வரி அபிராமியின் சிலைகளும் ஒரு வில்வங்கன்றும் உள்ளது. இந்த இடம் தான் இக்கோவிலை இன்னும் முன்னோக்கி அழைத்துச்செல்கிறது, இங்கே இருக்கும் ஒரு கற்சிலையானது முற்காலப்பாண்டியர்களின் ஆட்சியில் முருகக்கடவுளாக வைத்து வழிபாடு செய்ய்பட்ட சிலை. அடுத்தடுத்து விசாரித்ததில் இந்தக் கோவில் மட்டுமல்லாது அடுத்து 3 கி.மீ தொலைவில் மிகப்பழமையான பாண்டியர்கள் கட்டுமான கோவில் ஒன்று இருப்பதும் தெரியவந்தது. இந்த நடுகல் அமைப்பில் இருக்கும் முருகன் சிலை மிகவும் அபூர்வமான ஒன்று. அந்த சிலைகளுடனே ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லும் உள்ளது. காலத்தால் மிகவும் முந்தைய கோவிலாக இக்கோவில் இருந்திருக்கிறது. முற்காலப் பாண்டியர்கள் மதுரை, திண்டுக்கல், பாளையம், கூடலூர் வழியே கருரை அடையும் பெருவழிப்பாதை இருந்துள்ளது. இந்த அடிப்படையில் இங்கே சிறிய அளவில் கோவில் வைத்து வழிபாடு நடத்தியிருக்கலாம் பின்னர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வழிபாடு தொடர்ந்திருக்காலம் என உணரமுடிகிறது. கோவிலுக்கு மேற்கே பார்த்தா மிகப்பழமையான நந்தி சேதமடைந்த நிலையில் உள்ளது.
கோவில் ஒரு தள அமைப்புடைய கற்றளிக்கோவிலாக இக்கோவிலைக் கட்டியுள்ளனர். கருவறையை சுற்றிலும் கோஸ்டத்தில் தெற்குபக்கமாக பெரிய அளவில் தட்சிணா மூர்த்தி சிலையும், கிழக்கு பக்கமாக முருகன் சிலையும், வடக்குப்பக்கத்தில் பிரம்மாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் மேல் தளத்தில் ஒரு அரச மரம் வளர்ந்து அர்த்த மண்டபத்தை சேதப் படுத்தி அதன் வேர்கள் தரைப்பகுதி வரைக்கும் வளர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
கல்வெட்டு செய்திகள்.
கோவிலின் தெற்கு, கிழக்கு, வடக்குப்பகுதிகளில் குமுதவரிகளில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. 15 கல்வெட்டுகளுள் மதுரை கொண்ட கோபரகேசரி முலாம் பாராந்தக கோழனில் ஆறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் முந்தையது எனக் கொள்ளலாம். ஆக இவ்வாலயம் தஞ்சை பொிய கோவிலுக்கு முன்பாகவே 1100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிபாட்டில் இருந்து கற்கோவிலாக கட்டியுள்ளனர் என்பது தெளிவாகிறது. கோவிலின் 15 கல்வெட்டுகளில் "தனதுங்க" என்றும் "மதுரை கொண்ட கோப்பரகேசரி" என்று துவங்கும் 3 கல்வெட்டுகள் முதல் பராந்தக சோழனுக்குரியதாகவும், "ஸ்வஸ்தி திருமகள் போல" என்றும் துவங்கும் ஒரு கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழன் காலத்திற்குரியதாகவும் "ஸ்வஸ்தி திருமன்னி வளர" எனத் துவங்கும் ஒரு கல்வெட்டுமுதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு வடகிழக்குப் பகுதியிலும் உள்ளது. நான்கு தலைமுறையாக சோழ மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்தும் வழிபாடுகள் செய்தும் வந்தது உறுதியாகிறது. இக்கோவிலின் கல்வெட்டுகள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவையேயாகும்.
இராஜராஜ சோழன் சிறப்புப் பெயர்களைக் கொண்டே அக்காலத்தில் சோழ மண்டலத்தின் உட்பிரிவுகளாகப் பிரித்தனர். இந்தவகையில் கேரளாந்தக வள நாட்டின் கீழ் இக்கோவில் இருந்தாக குறிப்பிடப்படுகிறது. கேரளாந்தக வளநாடு, அபீமானஜீவ வளநாடு, ஆதனூர் நாடு எனக் குறிப்பிடப்படும் பகுதிகள் எல்லாம் இவ்வூருக்கு கிழக்கேயுள்ள குளித்தலையைச் சுற்றியுள்ள பகுதிகளாகும்.
முதலாம் இராஜராஜனின் கல்வெட்டில் இவ்வுர் கேரளாந்தக வளநாட்டின் உட்பிரிவான (தற்போதைய குளித்தலை) தட்டைக்கல் நாட்டின் ஒரு நிர்வாகப்ப பகுதியான தேவனப்பள்ளிக்கு கட்டுப்பட்ட சிற்றூராக திருநோம்பலூர் இருந்துள்ளது. மேலும் இவ்வூருக்கருகே தேவனப்பள்ளி, கேரளப்பள்ளி, சிரூர் என்ற கிராமங்களும் இருந்துள்ளன எனவும் இவையனைத்தும் கேரளாந்தக வளநாட்டில் இருந்துள்ளன.
கல்வெட்டில் சுந்தர சோழ தரிஞ்ககைக்கோளர் மற்றும் பாண்டிய குலாச தரிஞ்சகைக் கோளரும் எனும் பெயரில் இரண்டு படைப்பிரிவுகள் உள்ளதையும் இப்படைவீரர்கள் கொடுத்த தானங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
கல்வெட்டுகளில் இவ்வாலயத்திற்கு விளக்கொிக்க அளிக்கப்பட்ட நிவந்தங்களையும், அரசாங்க ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தண்டத் தொகையினை இவ்வாலயத்திற்கு பயன்படுத்தப்பட்டன எனத் தொிவிக்கிறது.
இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய” நிகழ்வினைப் பற்றி இக்கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும். காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலையில் பாஸ்கர மன்னன் இரவி வர்மனுனடனான போரில் ராஜராஜ சோழன் மகத்தான வெற்றி பெற்றும் சேரமன்னனின் கலங்கள் எனும் கப்பல்களை அழித்தால் “காந்தளுர்சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி” எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார், முதலாம் இராஜராஜ சோழனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
கோவிலின் வரவு செலவு கணக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டி, தானியங்கள் , காய்கறிகள் வாங்கிய விபரங்கள் உட்பட கோவிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜன் வெற்றி கொண்ட நாடுகளாக காந்தளுர் சாலை கலமறுத்தருளி வேங்கைநாடும், கங்கபாடியும் கங்கபாடியும் எனும் மெய்கீர்த்திகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரில்ஊர் வெள்ளம் வந்து பாதித்த போது ஒருவர் ஊர்க்கோவிலுக்கு கொடுத்த மானியமாக தனது நிலத்தைக் கொடுத்த குறிப்பு கல்வெட்டில் உள்ளது.
சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர் மகாதேவர் பற்றிய சிறப்புகள்.
சந்திரன் இக்கோவிலை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்ற சிறப்பு மிக்க தலமாகும்.
கருவூர்ப்புராணம் ஆம்பிராவதி நதிச்சருக்கத்தில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது.
சோமநாத இலிங்கம்
தாமம் நாற்றிய தண் தரளமே போலத்
தட மலர் மடல் அவிழ் பூகச்
சோமநாதத்தில் தண் சுடர்க் கலையோன்
துகளறு முனிவரன் தலைவி
காமர் பூங்குழழியால் வரும் சாபம்
தொலைவறக் கடிமலர் மழைதூய்
ஏமற வழுத்தூம் சோமநாதப்பேர்
இலிங்கம் ஒன்று உள்ளது இசைக்க அரிதால்
சோமவாரமான திங்கள் அன்று இங்குள்ள இறைவனை வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் அன்று வரும் பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி தினங்களில் அன்னதானம் மற்றும் வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் பெற முடியும்.
சோமவாரம் என்ற பெருமைக்குரிய திங்கள் அன்று இக்கோவிலில் இருக்கும் சிவனை வழிபட்டு சென்று நற்பேறு பெற்றதால் சோமேஸ்வரர் எனும் சிறப்பு பெயர் பெற்றதாகவும், இவ்வூருக்கு பின் நாட்களில் சோமூர் என்றும் ஆகிவிட்டது.
இக்கோவிலையும் அருகே உள்ள அக்னிபுரீஸ்வரர் ஆலயமும், சூரியனின் வணங்கிய ரவீஸ்வரர் ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது நற்பலன்களைத் தரும்.
2010 இல் திருப்பணி செய்ய ஆரம்பிக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகப்பணி நடைபெறாமல் உள்ளது. இறையன்பர்கள் உதவி செய்ய விரும்பினால் இக்கோவிலின் உள்ளுர் பொறுப்பாளர் திரு. பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி செய்து 10 நூற்றாண்டுக்கும் முன் சோழர்கள் வழிபட்ட சிவனை தொடர்ந்து வழிபாடு நடத்திட உதவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் மற்றுமொரு பழமையான சிவாலய தரிசனத்தில் உங்களை சந்திக்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி.
No comments:
Post a Comment