Sunday, August 21, 2022

தோண்டி எடுக்கப்பட்ட 1200 ஆண்டு பழமையான கணவாய்ப்பட்டி சிவன் கோவில்

கணவாய்ப்பட்டி சிவன் கோவில்
கோவில் அமைவிடம் : திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் கோபால்பட்டியை அடுத்து 2 கிமீ தொலைவில் கணவாய்ப்பட்டி எனும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி சிங்கம்புணரியில் இருந்து வருபவர்கள் நத்தம் வழியே வந்தடையலாம். 

பெருவழிப்பாதை: 
நத்தம் முதல் திண்டுக்கல் செல்லும் இந்த சாலைதான் சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலம் முதல் கடற்கரைப் பொருட்களும் செட்டி நாட்டிலிருந்து வரும் பொருட்களும் கொங்குநாடு செல்லும் பெருவழிப்பாதையாக இருந்துள்ளது. பெருவழிப்பாதை என்பது தற்போது நாம் பயன்படுத்தி வரும் நான்குவழிப்பாதை போன்ற போக்குவரத்து மிகுந்த சாலையாகக் கொள்ளலாம்.

கணவாய்ப்பட்டி குளமும் சிவன்கோவிலும் 
பெருவழிப்பாதையான இச்சாலையில் கண்வாய்ப்பட்டி குளமானது இன்றளவும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள குளத்தின் கரையில் இந்த சிவன் கோவில் இருந்துள்ளது. இந்தக்குளத்தை கோவிலின் வடமேற்கில் காணமுடியும் இன்றும் இக்குளத்தில் முற்கால மனிதர்கள் தங்கள் கல்ஆயுதங்களை கூர்மையாக்க பயன்படும் கூர் தீட்டும் குழி உள்ளதை காணமுடியும். இந்தக்கல் 10 அடி உயரத்தில் இருக்கிறது. காலப்போக்கில் குளத்தின் நீர் பெருக பெருக நெடுங்கல் கனத்தால் அமிழ்ந்துள்ளது. 

இக்கோவில் தற்போது அமைந்துள்ள இடத்தின் வடக்கு பக்கமாக கற்கோவிலின் உடைந்த பகுதிகளைக் காணமுடியும். கோவிலின் கருங்கற்கள் காலப்போக்கில் சேதமடைந்தும் மக்களின் பயன்பாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். 
கி.பி. 800 ஆம் ஆண்டு முதல் கி.பி 900 வரை மதுரையை ஆட்சிசெய்த இடைக்காலப்பாண்டியர்களின் காலத்தில் இக்கோவில் வழிபாட்டில் இருந்துள்ளது. சில நூற்றாண்டுகளில் கருவறையில் வைக்கப்பட்ட மணற்பாறை லிங்கமானது தேய்மானம் ஏற்பட்டதால் 1100 முதல் 1200 ல் தற்போதை லிங்கத்தை வைத்துள்ளனர். இக்கோவில் கருவறை மட்டுமே உள்ள ஒற்றைக்கருவறை மட்டுமே உள்ளவாறு அமைத்துள்னர். இக்கோவிலின் நுழைவு வாயில் பலகைக்கல் கருங்கல் மற்றும் செம்பொறைக்கல் வகைக்கற்களைக் கொண்டும் கட்டுமானம் செய்துள்ளனர்.
கி.பி.1736 முதல் 1800 வரை இப்பகுதியில் பல்வேறுபட்ட போர்கள் நடந்துள்ளன. ஆற்காடு நவாப் முகமது அலி அவர்களுக்கும் நத்தம் மேலூர் பகுதியைக் காத்து வந்த ஆறலைக் கள்வர்களுக்கும் இரண்டு முறை போர் நடந்துள்ளது. இரண்டாவது போரில் ஆறலைக்கள்வர்கள் வெற்றி பெற்று முகமது அலி அவர்களின் விரல்கள் துண்டிக்கப்படுகிறது. இப்போர்களினால் மதுரைச் சீமையில் திவானி என்னும் நிலவரி வசூலை ஆற்காட்டு நவாப்கள் வெள்ளையர்களுக்கு வழங்கினார். 1789 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கும் விருப்பாச்சி கோபால் நாயக்கரும் மூன்று முறை போர் நடந்துள்ளது. மூன்றாவது முறைபோரில் கோபால் நாயக்கர் தோற்கிறார். இதன் நினைவாகவே கணவாய்ப்பட்டிக்கு அருகே கோபால்பட்டி என ஊரானது. இப்போர்க் காலங்களில் இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் லிங்கத்தை கோவிலில் இருந்து பாதுகாக்க எண்ணி மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். மக்கள் எண்ணியது போலவே கோவில் இடித்து தகர்க்கப்பட்டது. காலங்கள் உருண்டோடின மண்மேடாய்ப்போன இவ்விடத்தில் சீரமைப்பு பணி செய்யும் போது 1994 ஆம் ஆண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் தெரிந்துள்ளது. பின்னர் தோண்டிப்பார்த்தபோது தற்போதுள்ள சிவலிங்கம் அப்படியே சேதப்படாமல் இருந்துள்ளது. இவ்வூரைச்சேர்ந்த ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் சிவலிங்கத்தை இவ்விடத்திலேயே வைத்து வழிபடத்துவங்கினர். 1996 1998 மற்றும் 2020 ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கண்மாய்ப்பட்டிக்கும் கோபால்பட்டிக்கும் இடையே 1கி.மீ தொலைவில் மாம்பழம் கூழாக்கும் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இதன் கிழக்கே பிற்காலப் பாண்டியர்கள் கால விஷ்ணுதுர்கை சிற்பம் ஒன்றை இன்றும் மக்கள் காவல் பெண்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த இடத்தில் செங்கற்றளி ஒன்று இருந்துள்ளது. இதன் செங்கற்களை இன்றும் காண முடிகிறது. இக்குளத்தில் ஒரு கல்வெட்டும் இருப்பதாக தெரிவித்தனர். 

நத்தம் முதல் திண்டுக்கல் செல்லும் வழி வரையிலும் இதேபோல சிவாலயங்களை பார்க்கமுடியும் இதற்கடுத்து விராலிப்பட்டி எனும் ஊரின் தெற்கே மகம் நட்சத்திரத்திற்குரிய மகாலிங்கேஸ்வரர் கோவிலையும் காணமுடிகிறது.

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி



No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...