அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாவனம் எனும் கிராமத்தின் முந்திரிக்காட்டில் ஒரு சிவலிங்கம் ஆவுடையின் கீழ்ப்பாகத்துடனும், சண்டிகேஸ்வரருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நமது குழுவினருடன் 29.04.2023 அன்று நேரில் சென்றோம்.
விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்கை அடுத்த வலப்பக்க பிரிவின் வழியே சென்றால் சிலையுர் அடுத்து வாவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் முக்கிய பிரதான விவசாயம் முந்திரி சாகுபடி மட்டுமே. ஏதேனும் பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் 5 கிமி தொலைவில் உள்ள ஆண்டிமடம் தான் செல்லவேண்டும். இவ்வூரில் கவிதா என்பவரின் முந்திரித் தோட்டத்தில் 5தலைமுறையாக ஒரு சிவலிங்கமும், சண்டிகேஸ்வரர் புதைந்த நிலையிலும் இருந்துள்ளது. அவ்வப்போது மட்டுமே வழிபாடு செய்து வந்துள்ள்னர். கற்சிலைகள் வெயிலில் உள்ளதைப் பார்த்து சில மாதங்களுக்கு முன் மேற்கூரை அமைத்துள்ளனர்.
இவ்வூரின் அருகே கருக்கூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வனத்தறை அதிகாரி திரு.கலியமூர்த்தி அவர்கள் பிரதோசம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் வழிபாடு செய்து வந்துள்ளார்.
திருப்பணி செய்து தர வேண்டி வெங்கடேசன் என்ற அடியார் மூலம் தகவல் கிடைத்ததும் நேரில் சென்று பணியைத் துவங்கினோம்.
3 அடி உயரத்தில் இருந்த லிங்கபாணத்திற்கு பீடமும், ஆவுடை போன்ற அமைப்பை செங்கல் மூலமும் இரவு 12 மணிக்கு கட்டி முடித்தோம்.
அன்றாடம் வழிபாடு நடைபெறாவிட்டாலும் அவ்வப்போது பிரதோச வழிபாடாகிலும் நடைபெற வேண்டும் என எண்ணி நமது கோவை அரன் பணி அறக்கட்டளையின் திருமதி சந்திரா அவர்களைத் தொடர்பு கொண்டு உடனே ஒன்னேமுக்கால் அடியில் ஒரு நந்தியம்பெருமான தேவை என்றதும் திரு. கணேசன் ஐயா அவர்கள் மூலம் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு காலை 8 மணிக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு துவங்கியது.