Monday, January 2, 2023

வயல்வெளியில் 4½ அடி உயர சிவலிங்கம்

அமராவதி ஆற்றின் கரையில் 10 ஆம் நூற்றாண்டு 4 ½ அடி உயர சிவலிங்கம்

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் திரு.ராமசாமி என்பவரின் தோட்டத்தின் வயல் வெளியில் இருந்த சிவலிங்கம், சண்டிகேஸ்வரர் மற்றும் இடபம் (ரிஷபம்) இருந்தது. 4½அடி உயரத்தில் இருந்த சிவலிங்கம் வயலில் இருந்து எடுக்கப்பட்டும், சண்டிகேஸ்வரர் (2½x , 1½ அடி அகலம்) மற்றும் ரிஷபம் - நந்தி (2¾) க்கு பீடம் கட்டப்பட்டு சிறப்புற பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தப் பகுதியானது கி.பி 950 களில் பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோவிலை எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோவில்கள் அனைத்தும் கற்றளிகளாக கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர். இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம் , சண்டிகேஸ்வரர் , நந்தி , ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளது.
சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீட மகுடமும் , இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும் , கழுத்தில் ஆபரணங்களும் , மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் வலது கையில் மழுவோடும் , இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். ஊறு என்பது தொடை என்பதாகும். இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோவில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் கோவில் அழிந்திருக்கலாம். கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோவில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம்.

Google Map Link
தொடர்ந்து பயணிப்போம்...
சிவாலயங்களை நோக்கி...
சிவசங்கர்
WhatsApp 9976913310

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...