Wednesday, September 8, 2021

திருப்பாராய்த்துறை பராய் நாதர்

திருப்பராய்த்துறை பராய்த்துறை நாதர் திருக்கோவில்

        

குளித்தலை கடம்பவன நாதர் திருக்கோவில்


குளித்தலை கடம்பவன நாதர் திருக்கோவில்
அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு ஒரு நாள் லீவு கிடைச்சது, ஒரே நாளில் 4 சிவன் கோவில் தரிசனம் பண்ணலாம்னு நினைச்சு கிளம்பி பக்கத்தில் இருக்கும் கரூர், திருச்சி மாவட்டங்களில் இருக்கும் 3 பாடல் பெற்ற கோவில், 1 பராந்தக சோழன் பிரம்ப்பதி தோஷம் நீங்கப்பேற்ற சிவன் கோவில் பார்த்துட்டு வரலாம்னு கிளம்பியாச்சு, அய்யர்மலை வழியே போய் குளித்தலை கடம்பவன ஷ்வரை தரிசிப்போம் முதல்ல.

தேவாரப்பாடல் பெற்ற 276 தளங்களில் 65ஆவது பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர் இந்த கோவிலில் இருந்து தேவாரப் பதிகம் பாடியிருக்கிறார். 


காவிரி நதிக்கரைக்கு தென்கரையில் 127 உள்ள சிவ தலங்களில் இது இரண்டாவது சிவதலம் முதல் தளம் இதற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ரத்தினகிரீஸ்வரர் அப்படிப் பார்த்தா தென்கரையில் இருக்கக்கூடிய காவிரி கரைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய முதல் சிவாலயம் இந்த கடம்பவனநாதர் சிவாலயமாகும்.

இந்த ஊருக்கு குளித்தலை என பெயர் வந்ததற்கான காரணத்தை முதல்ல தெரிஞ்சுக்குவோம்.

காவேரியின் குளிர்ந்த அலைகள் கரையில மோதி மோதி காற்றில் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் இந்த இடத்திற்கு "குளிர்தண்அலை" என்றும், குழித்த சோலைகளை உடையதால் "குழித்தண்டலை" என்றும், சொல்றாங்க கல்வெட்டுகளிலும் கூட குளித் தண்டலை என்றுதான் இருக்கு.

 கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை, கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும்,
 
பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உடைய தனித்துவம் இருக்கும் அதனால கொஞ்சம் பொறுமையா பதிவு பாருங்க

இந்தக் கோயிலைப் பற்றி சுவாரஸ்யமான அந்த தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

1. 
கங்கை வடக்கு நோக்கிய சிவதலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார்.
தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி 

 இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும் பாவ நிவர்த்தி பெறுகிறான். 



2. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் கடம்பவன நாதரை இறைவனை வழிபட்டுள்ளனர்.


3. கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. 

இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர். சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம். 

4. முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள் சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக் கடம்பவனத்தை அடைந்தவுடன் அத்தோஷம் அவர்களை நீங்கியது. அன்று முதல் இன்றும் இறைவன் சன்னதியில் அவருக்குப்பின் நின்றுகொண்டு சதாகாலமும் அவரை வழிபடுவதைக் காணலாம் இது காரணமாக இத்தலம் சத்தியபுரியாகிறது.

5. சோமகன் என்ற அரக்கன் நான்கு மறைகளையும் களவாடி பாதாளம் சென்று மறைகிறான். உலகோர் பிரார்த்தனைக் கிணங்கி நாராயணன் இத்தலத்தை அடைத்து இறைவனைப் பூசித்து அவனருளால் மச்சாவதாரம் எடுத்து, அரக்கனை வதைத்து, நான்மறைகளை மீட்டு, இத்தலத்து இறைவனடியில் சமர்ப்பித்து, மீண்டும் உலகோர்க்கு அளிக்கிறார். இது காரணமாக இத்தலம் சப்தபுரி, வேதபுறி, என்றும் சதுர்வேதபுரி என்றும் பெயர் பெறுகிறது.


கடம்பவனநாதரூக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .

6. பிரமன் தன் படைப்புத் தொழிலில் அலுப்புக்கொள்கிறான். அரனிடம் தனக்கு இனிப் பிறவா வரம் வேண்டுகிறான். அரனோ தான் பூவுலகில் அகண்ட காவிரிக் கரையில் ஒரு புறம் சத்துவடிவமான மலையாகவும், ஒரு புறம் சித்துவடிவான மலையாகவும், இடையில் காவிரியில் தென்கரையில் ஆனந்த வடிவமாக அருளாட்சி செய்யும் இடத்தில் தன்னை அடைந்து, காவிரி நீர்கொண்டு அபிஷேக ஆராதனை செய்ய ஆக்ஞாபிக்க, பிரமனும் இத்தலத்தை அடைந்து பூசனை புரிந்து, அரனுக்கும், அம்மைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் ஆலயம் எழுப்பி, அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, நித்திய பூசனைகளைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான். அதனால் இத்தலம் பிரம்புரி என்ற பெயர் பெறுகிறது.

7. கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.  

8. ராகு காலத்தில் பூஜை நடக்கும் சிறப்பு மிக்க கோவில். 
இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால், இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாள்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும் பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்துவைத்தால், திருமணத்தடை அகலும் என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்துவைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.

9. இத்திருக்கோயிலில் இரு நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.

10.முருகன் : சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார்.




கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: " விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் (ஐயர் மலைக்குச்) சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும்.

 அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத் தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம். இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் " என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.  
சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலமாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு விநாயகப் பெருமான் இடம்மாறி, மறுகோயில் உள்ளார்.                                      
தைப் பூசத்திருவிழாவும், மாசி பிரம்மோற்சவப்பெருவிழாவும் முக்கியமானவை. 

சிவன், தைப்பூசத்தன்று சப்த கன்னியர் இக்கு காட்சி கொடுத்ததாக ஐதீகம்.

தைப்பூசத்தன்று கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர், 

ரத்னகிரி கரும்பார் குழலி உடனுறை ரத்னகிரீச்வரர், 

ராஜேந்திரம் தேவ நாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர், 

பேட்டைவாய்த்தலை தேவநாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர். 

கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீச்வரர், 

திருஈங்கோய் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாலேசுவரர், 

முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீச்வரர், 

வெள்ளூர் சிவகாமியம்மை உடனுறை திருக்காமீச்வரர் 
ஆகிய எட்டு ஊர் இறைவன் இறைவிகள் காவிரிக்கரையில் முகாமிட்டு, தீர்த்தவாரி கொடுத்து, அன்று இரவு அவரவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள அலங்காரப் பந்தலில் கொலுவீற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு காட்சி கொடுத்து அடுத்த நாள் அவரவர்கள் ஆலயம் செல்லும் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

காலையில் கடம்பரையும், உச்சியில் சொக்களையும் (ரத்னகிரீச்வரர்), மாலையில் திருஈங்கோய் மரகதாசலேச்வரரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிட்டும் என்று தலபுராணமும்; இவர்களுடன் அர்த்த சாமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரீச்வரரையும் தரிசனம் செய்தால் அளவற்ற பலன் கிட்டும் என்று காவேரி ரஹஸ்ய புராணமும் கூறுகின்றன.

மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும் தை மாதத்தில் பூசத் திருவிழாவும் மிகவும் சிறப்புப் பெற்றது.

கல்வெட்டு கூறும் விவரங்கள்: பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை யென்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபினிடம் மந்திரியாக இருந்தவர். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவர்களும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து தேர்-திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாஸனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது

சப்தகன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன , பிரம்மா, மகாவிஷ்ணு


கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம்.
இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.

இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.

கோவில் அமைப்பு:
வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். கோஷ்டத்தின் பின்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருக்கிறார். வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர்.
இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது. கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம்.

இத்தலத்தில் ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

இச்சன்னதிக்கு முன்புறம் “பரமநாதர்’ காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.

‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்பது பொருந்தமேயாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்தவனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைத்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தலவிருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.


“காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” -என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே

Tuesday, September 7, 2021

திருச்சூர் வடக்கு நாதர் கோவில்

திருச்சூர் வடக்கு நாதர் கோவில்



வணக்கம் இன்னிக்கு கேரளா மாநிலம், திருச்சூரில் பரசுராமரால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயிலாம் வடக்கு நாதர் கோவில் பற்றி முழுமையாக பார்ப்போம். 
ஒரு ரெண்டு நாள் லீவு கிடைத்தது train ticket போட்டு கிளம்பியாச்சு. 

ரொம்பவும் புதுமையான அனுபவமாக இருந்தது. கோவில்களின் நாடு (God's own Country Kerala) என்று ஒரு Slogan சொல்கிறார்களே என்னதான் அப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு!. இன்று தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற 2 சிவாலயத்தில் அதனை உணர முடிந்தது.

த்திருசூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அம்சமான, அழகான கோவில்தான் வடக்கு நாதர் கோவில். 

கேரளாவுக்கு உரிய கட்டிடக் கலை அமைப்பில் இக்கோவில் இருக்கு. வடக்குண்ணநாதன் கோயிலின் தோற்றம் பற்றிய கதை பிரம்மந்த புராணத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது, இந்த வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. 
பரசுராமர் தன் சாபம் நீங்க வேண்டி 108 சிவாலயங்களை கட்டினார். அதில் முதல் முதல் சிவாலயம் இந்த வடக்குண்ணாதர் கோவில். 
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார். சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார். ஆனால் போனவன் வரவில்லை. நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் ‘பனிலிங்கம்’ என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.

மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, விளக்குகளின் வெப்பமோ இறைவனின் மேல் சாததப்பட்ட நெய்யை உருக்குவதில்லை.
அடுத்து கோவில் அமைப்பு மற்றும் வழிபடும் முறை பற்றி பார்ப்போம்.
 திருக்கோயிலின் முகப்பில் உள்ள ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரத்தை 7 முறை பிரதட்சணம் செய்து திருக்கோயிலில் இடது புறமாக சென்றால் முதலில் பார்ப்பது வில்குழி தீர்த்தம். 
இந்த விழ்குழி தீர்த்தம் வரக் காரணம் பற்றி பார்ப்போம். 
அர்ச்சுனன் தவம்இருந்து பாசுபதம் பெற்ற பின் சிவ பெருமானைத் தரிசிக்க கயிலை சென்ற பொழுது சிவனைக் காணாமல், இந்த வடக்கு நாதர் கோவிலுக்கு வந்து சுற்றிவரும்போது பரசுராமர் கோவிலைக்கண்டு, ஷத்திரியன் ஆன தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணி, தன் அம்பை ஊன்றி வெளிப்பககமாகக் குதித்துவிட்டான்.
அவன் அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு சுனை உண்டாகி சுனை வில்குழி தீர்த்தம் எனப்படுகிறது. வில்குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும்..அடுத்து விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை 3 தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும். 
கோயிலின் அமைப்பு
எந்தக் கோயில் போனாலும் நாம் முதலில் போவது கணபதியிடம்தான். ஆனால் இந்தக் கோயிலில் அப்படி இல்லை. முதல் தரிசனம் நெய்யுடன் பளிங்கு போல் மின்னும் வடக்குநாதரைத்தான் செய்ய வேண்டும். அவரையும் பிரதட்சிணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்று சென்றுவிட்டு பின் திரும்பி வரவேண்டும். அதன் பின்தான் கணபதியின் தரிசனம். அதற்குப் பின் தரிசிக்க வேண்டியது கருணை பொழியும் பார்வதி அன்னையை தரிசிக்க வேண்டும். 
வடக்கு நாதர் அமர்ந்திருக்கும் கர்ப்பகிரஹம் வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது. கிழக்கு முகமாக பார்வதி தேவியின் சன்னிதானம் இருக்க, மேற்கு முகமாக வடக்கு நாதர் சன்னதி அமைந்திருக்கிறது. இங்கு மின்சார விளக்கு ஏற்றப்படாமல் பல எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தப் புனித ஒளியில் பரமேஸ்வரனை தரிசிக்கின்றோம்.
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், 
பாறை போல் இறுகி உள்ளது.
எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
நெய் கட்டியாக உறைந்து வரும்.
கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
பூச்சிகள் மூலவரை தாக்காது.
மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
 இங்கு இருக்கும் கோயில்களில் பிரசாதம் சந்தனம்தான். ஆஹா! என்ன மணம்! நாம் அதை நெற்றியில் தரிக்க, அந்த மணம் நம் கூடவே வந்து நம்மைச் சுற்றியும் பரவுகிறது. நுழையும் இடத்தில் துவார பாலகர்கள் இருவர் நிற்கின்றனர். மேலே கோபுரம் இல்லை. ஆனால், கேரள பாணியில் கூரை போல் செப்புத் தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
அதற்கு அடுத்த சன்னதி ஸ்ரீசங்கரநாராயணர், அடுத்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம். அங்கு ஒரு ராமர் சன்னதி இருக்கிறது. 
சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது

பிரகாரத்தில் ஒரு பெரிய ஹால் இருக்க, அங்கு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த இடத்தைக் கூத்தம்பலம் என்கிறார்கள். இதில் சுமார் ஆயிரம் பேர் அமரலாம். நாட்டியம் ஆடும் முன் ஒரு ஆள் உயரத்திற்குக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விடிய விடிய அது எரிந்து கொண்டிருக்கும்.

சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.


ஆதிசங்கரர் தொடர்பு
இந்த இடம் ஆதிசங்கரருடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரரின் அன்னை திருமதி ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதியர் குழந்தைக்காக ஏங்கி, வடக்கு நாதரை வேண்டினாராம். வடக்கு நாதரும் அவள் கனவில் வந்து, "ஆயுள் குறைந்த நல்ல சற்புத்திரன் வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளுடன் திறமை இல்லாத முட்டாளாக ஒரு புத்திரன் வேண்டுமா?" என்று கேட்க, அன்னையும் தனக்குப் புத்திசாலியான சற்புத்திரன்தான் வேண்டும் என்று மொழிய, அவரும் ‘அப்படியே நடக்கும்’ எனக் கூறி மறைந்து விட்டார். இந்தக் கோயிலின் வழிபாடு முழுவதையும் ஸ்ரீஆதிசங்கரரே முறைப்படுத்தி வைத்திருக்கிறார். ஆலயத்தில் சிம்மோதரனுக்கும், கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சங்கு, சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கான சமாதியும் இடம் பெற்றிருக்கிறது

ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வரும் போது சில மூலிகைகள் இந்தக் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம். ஆகையால் இங்கு வருபவர்கள் இந்த இடத்திலிருந்து சிறு புல்லையாவது பிடுங்கிக் கொண்டு போய் பத்திரப்படுத்துகின்றனர். இந்தக் கோயிலைத் ‘தென் கயிலாயம்’ என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது கைகளால் எழுதி வேண்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது
பிரகாரத்தில் ஒரு பெரிய ஹால் இருக்க, அங்கு நாட்டிய நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த இடத்தைக் கூத்தம்பலம் என்கிறார்கள். இதில் சுமார் ஆயிரம் பேர் அமரலாம். நாட்டியம் ஆடும் முன் ஒரு ஆள் உயரத்திற்குக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விடிய விடிய அது எரிந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. 

மேற்குத் திசையில் கோபுரத்திற்கு அருகில் ஒரு சதுரமான கல் இருக்கிறது. அதை நான்கு பக்கம் மேடை கட்டிக் காத்து வருகிறார்கள். கோயில் தரிசனம் முடிந்த பின் பிரசாதத்தில் கொஞ்சத்தை இதில் எறிய வேண்டுமாம். இந்தக் கல்லின் பெயர் ‘கலிக்கல்’. இது வளர்ந்து கொண்டே வருகிறதாம். கலி முற்ற இந்தக் கல் கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். அதனால் அதன் மீது பிரசாதம் எரிந்து வளர விடாமல் செய்கிறார்களாம். இதைத் தவிர ஆதிசங்கரர் சமாதியான இடமும் அதற்கான ஆலயமும் இங்கு உள்ளது. இந்த இடத்தைச் ‘சங்கு சக்கரம்’ என்கிறார்கள்..

மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.
இரவு பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும். வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத சக்தி படைத்த ஆலயம் !

திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், "யானையூட்டு விழா'வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யானைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்வார்கள்.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் தேதியன்று யானையூட்டு விழா நடந்து வருகிறது.
அதிகாலை 4 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி , யானைகள் பங்கேற்கும் கஜபூஜை நடைபெறும். கஜபூஜையுடன் , தெற்கு கோபுரவாசல் முன் யானைகள் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
சித்திரை முதல் நாள் விஷூக்கனி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அடுத்து கேரளாவில் இருக்கும் ஒரே ஒரு பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரிய திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் போகலாம்

திருஅஞ்சைக்களம் மகாதேவர் கோவில் (Sri Vanjikulam Mahadevar)

 திருஅஞ்சைக்களம் மகாதேவர் கோவில் (Sri Vanjikulam Mahadevar)


 

இறைவர் திருப்பெயர்:   அஞ்சைக்களத்தீஸ்வரர்மகாதேவர்.

இறைவியார் திருப்பெயர்: உமையம்மை.

தல மரம்:  சரக்கொன்றை

தீர்த்தம் :  சிவகங்கை.

வழிபட்டோர்: சேரமான் பெருமாள் நாயனார்சுந்தரர்

தல வரலாறு

பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.

இங்குள்ள நடராசர்சேரமான் பெருமான் பூசித்தது.

வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.

கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - தலைக்குத் தலைமாலை.

 

சிறப்புகள்

இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும்.

அவதாரத் தலம் : கொடுங்கோளூர் - திருவஞ்சைக்களம் (கொடுங்கலூர்)

வழிபாடு     : இலிங்க வழிபாடு.

முத்தித் தலம் : திருவஞ்சைக்களம் கொடுங்கலூர்.

குருபூசை நாள் : ஆடி - சுவாதி.

 

 

கேரள பாணியில் அமைந்த கோயில்.

 

 

துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.

 

 

கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

அஞ்சைக்களத்தபர் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார்.   

இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலைஇதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது

கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில்யானை உருவங்கள்வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும்எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர்சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.

சுந்தரர் கயிலை சென்ற ஆடிசுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர்சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.

இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.

அமைவிடம் மாநிலம் : கேரளா சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடாநிலையத்தில் இறங்கிஅங்கிருந்து கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொடர்பு : 0487-2331124

தொடர்புக்கு: 8754422764


சோமூர் சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர் மகாதேவர் Somur Someshwarar @ Thirunombalur Mahadevar Temple சந்திரன் சாபம் நீங்கப்பெற்ற சிவாலயம்

அருள்மிகு சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர்மகாதேவர் உடனுறை மணோன்மணியம் அம்பாள் திருக்கோவில்

முழு வீடியோ தொகுப்பு

      

 

        கருர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா சோமூரில் இருக்கு, கருரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோவிலுக்கு கரூரில் இருந்து பேருந்து வசதி இருக்கு கார், பைக் மூலமாகவும்  சென்றடையலாம். 

Google Map Location  https://maps.google.com/?cid=11772520941510456107&entry=gps

கோவிலின் அமைப்பு  

        இக்கோவில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளுக்கு இடையே மேற்கு நோக்கி  அமைந்துள்ளது.  சோமூரின் தென்மேற்கு பகுதியில் மரங்கள் மற்றும் தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் கருவறை சிறிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் பெரிய அளவுடையதாகவும் இருக்கும் ஆனால் இந்தக்கோவலில் மட்டும் கருவறை பெரிய அமைப்பாகவும் அர்த்த மண்டபம் சிறியதாகவும் அமைத்துள்ளனர். 

        தஞ்சை பெரிய கோவில் அமைப்பில் இரண்டு மிகப்பெரிய துவார பாலகர்கள் அர்த்த மண்டபத்தின் வாயிலில் வைத்துள்ளனர். இரண்டும் பார்க்க ஒரே அமைப்பாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையிலே சின்னச்சின்ன மாற்றங்களைப் பார்க்கலாம்.  இவர்களின் காதுகளில் குணடலங்களும், கைகளில் மோதிரங்கள், வளையல்கள் மற்றும் கீர்த்தி முக கவசங்களும் அலங்கரிக்கின்றன. கண்டிகை, சாவடி மற்றும் கல் பதிக்கப்பட்ட மாலை ஆகியன அவர்களின்  கழுத்தை அலங்கரிப்பதையும் பார்க்க முடியும். 

           ஆலயச் சுவரின் வெளிப்பகுதியில் காணப்படும் தூண்களில் தாடி, பலகை, குடம் ஆகியன மிக நோ்த்தியாக காணப்படுகிறது. கோவில் சுவர் மீது அமைக்கப்பட்டுள்ள கபோத அமைப்பிலுள்ள பிரஸ்தரம் என்ற கூரையின் விளிம்பில் பூதவரி, கொடுங்கை, யாளிவரி என்ற மூன்று பகுதிகளும்  தெளிவாகவும் நோ்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

        பூதவரியானது கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றில் பிரஸ்தரம் முழுவதும் அமைந்துள்ளது. இசைக்கருவிகளை வாசிப்பது போலவும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போலவும், நடனமாடுவது போலவும் பூதகணங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பூதகணங்கள் பேசுவது போல சிறப்பாக வடித்துள்ளனர்.  யாளிவரிகளில் யாளிகள் பிரஸ்தரத்தின் முழநீளத்திற்கும் காட்சியளிக்கின்றன. 

 கோவில் மேல்தளத்தில் நான்கு நந்தி  

        கருவறையின் பிரஸ்தரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு அழகிய நந்தி சிலைகளை காண முடிகிறது. இத்தகைய அமைப்பு இப்பகுதியிலுள்ள வேறு சிவாலயங்களில் இல்லை. முற்காலத்தில் ஆலயம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் சிவன் கோவில் என்பதை பார்த்தவுடன் உணர்த்தும் விதம் இத்தகைய நந்திகள் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் இந்த நந்தியின் சிலையை சுற்று மதில்களில் அமைக்கும் வழக்கம் வந்தது. 

          இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போல ஸ்தூல லிங்க அமைப்பைப் போல அமைத்துள்ளனர். கோவிலின் உச்சி கோபுரம் வரையிலும் லிங்க அமைப்பிலும் மையத்தில் மேற்கு நோக்கி வட்டவடிவ சிவலிங்கத்தை அமைத்துள்னர். முற்காலத்தில் கற்கோவிலாகவும் விமானம் செங்கற்களால் கட்டியும் , காலப்போக்கில சேதமடைந்ததால பிற்காலத்தில் திருப்பணி செய்துள்ளனர். 

    மூலவருக்கு வலது இடமாக இருக்க வேண்டிய விநாயகர் முருகர் சிலைகளுக்கு பதிலாக பெரிய அளவில் ஒரு விநாயகர் சிலை மட்டும் இருப்பது சிறப்பு. அர்த்த மண்டபத்திலேயே மனோண்மனி அம்பாள் உள்ளார்.  இக்கோவிலில் தனித்தனி பிராகாரங்கள் இல்லாததால் 2010 ஆம் ஆண்டு விநாயகர், முருகன், நால்வர், அம்பாள், நவக்கிரகம் வைக்க கட்டிடப்பணிகள் செய்தனர், 90 சதவீதம் வேலை முடிந்துவிட்டது, ஆனாலும் திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க இயலவில்லை.

        இங்கிருக்கும் நந்தி வலது பக்கமாக சாய்ந்த அமைப்பில் சோமேஸ்வரரை தரிசிப்பது போல பெரிய அமைப்பாக உள்ளது. கொஞ்சம் மேற்காக வராகி அம்மன் சிலை மற்றும் மகேஷ்வரி அபிராமியின் சிலைகளும் ஒரு வில்வங்கன்றும் உள்ளது. இந்த இடம் தான் இக்கோவிலை இன்னும் முன்னோக்கி அழைத்துச்செல்கிறது,  இங்கே இருக்கும் ஒரு கற்சிலையானது முற்காலப்பாண்டியர்களின் ஆட்சியில் முருகக்கடவுளாக வைத்து வழிபாடு செய்ய்பட்ட சிலை. அடுத்தடுத்து விசாரித்ததில் இந்தக் கோவில் மட்டுமல்லாது அடுத்து 3 கி.மீ தொலைவில் மிகப்பழமையான பாண்டியர்கள்  கட்டுமான கோவில் ஒன்று இருப்பதும் தெரியவந்தது. இந்த நடுகல் அமைப்பில் இருக்கும் முருகன் சிலை மிகவும் அபூர்வமான ஒன்று. அந்த சிலைகளுடனே ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லும் உள்ளது. காலத்தால் மிகவும் முந்தைய கோவிலாக இக்கோவில் இருந்திருக்கிறது. முற்காலப் பாண்டியர்கள் மதுரை, திண்டுக்கல், பாளையம், கூடலூர் வழியே கருரை அடையும் பெருவழிப்பாதை இருந்துள்ளது. இந்த அடிப்படையில் இங்கே சிறிய அளவில் கோவில் வைத்து வழிபாடு நடத்தியிருக்கலாம் பின்னர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வழிபாடு தொடர்ந்திருக்காலம் என உணரமுடிகிறது.  கோவிலுக்கு மேற்கே பார்த்தா மிகப்பழமையான நந்தி சேதமடைந்த நிலையில் உள்ளது. 

        கோவில் ஒரு தள அமைப்புடைய கற்றளிக்கோவிலாக இக்கோவிலைக் கட்டியுள்ளனர். கருவறையை சுற்றிலும் கோஸ்டத்தில் தெற்குபக்கமாக பெரிய அளவில் தட்சிணா மூர்த்தி சிலையும், கிழக்கு பக்கமாக முருகன் சிலையும், வடக்குப்பக்கத்தில் பிரம்மாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

        கோவிலின் மேல் தளத்தில் ஒரு அரச மரம் வளர்ந்து அர்த்த மண்டபத்தை  சேதப் படுத்தி அதன் வேர்கள் தரைப்பகுதி வரைக்கும் வளர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

கல்வெட்டு செய்திகள். 

    கோவிலின் தெற்கு, கிழக்கு, வடக்குப்பகுதிகளில் குமுதவரிகளில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. 15 கல்வெட்டுகளுள் மதுரை கொண்ட கோபரகேசரி முலாம் பாராந்தக கோழனில் ஆறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் முந்தையது எனக் கொள்ளலாம். ஆக இவ்வாலயம் தஞ்சை பொிய கோவிலுக்கு முன்பாகவே 1100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிபாட்டில் இருந்து கற்கோவிலாக கட்டியுள்ளனர் என்பது தெளிவாகிறது. கோவிலின் 15 கல்வெட்டுகளில் "தனதுங்க" என்றும் "மதுரை கொண்ட கோப்பரகேசரி" என்று துவங்கும் 3 கல்வெட்டுகள் முதல் பராந்தக சோழனுக்குரியதாகவும், "ஸ்வஸ்தி திருமகள் போல" என்றும் துவங்கும் ஒரு கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழன் காலத்திற்குரியதாகவும் "ஸ்வஸ்தி திருமன்னி வளர" எனத் துவங்கும் ஒரு கல்வெட்டுமுதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு வடகிழக்குப் பகுதியிலும் உள்ளது. நான்கு தலைமுறையாக சோழ மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்தும் வழிபாடுகள் செய்தும் வந்தது உறுதியாகிறது. இக்கோவிலின் கல்வெட்டுகள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டவையேயாகும். 

        இராஜராஜ சோழன் சிறப்புப் பெயர்களைக் கொண்டே அக்காலத்தில் சோழ மண்டலத்தின் உட்பிரிவுகளாகப் பிரித்தனர். இந்தவகையில் கேரளாந்தக வள நாட்டின் கீழ் இக்கோவில் இருந்தாக குறிப்பிடப்படுகிறது. கேரளாந்தக வளநாடு, அபீமானஜீவ வளநாடு, ஆதனூர் நாடு எனக் குறிப்பிடப்படும் பகுதிகள் எல்லாம் இவ்வூருக்கு கிழக்கேயுள்ள குளித்தலையைச் சுற்றியுள்ள பகுதிகளாகும். 

            முதலாம் இராஜராஜனின் கல்வெட்டில் இவ்வுர் கேரளாந்தக வளநாட்டின் உட்பிரிவான (தற்போதைய குளித்தலை) தட்டைக்கல் நாட்டின் ஒரு நிர்வாகப்ப பகுதியான தேவனப்பள்ளிக்கு கட்டுப்பட்ட சிற்றூராக திருநோம்பலூர் இருந்துள்ளது. மேலும் இவ்வூருக்கருகே தேவனப்பள்ளி, கேரளப்பள்ளி, சிரூர் என்ற கிராமங்களும் இருந்துள்ளன எனவும் இவையனைத்தும் கேரளாந்தக வளநாட்டில் இருந்துள்ளன. 

        கல்வெட்டில் சுந்தர சோழ தரிஞ்ககைக்கோளர் மற்றும் பாண்டிய குலாச தரிஞ்சகைக் கோளரும் எனும் பெயரில் இரண்டு படைப்பிரிவுகள் உள்ளதையும் இப்படைவீரர்கள் கொடுத்த தானங்கள் பற்றியும்  குறிப்பிட்டுள்ளது.

  கல்வெட்டுகளில் இவ்வாலயத்திற்கு விளக்கொிக்க அளிக்கப்பட்ட நிவந்தங்களையும், அரசாங்க ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தண்டத் தொகையினை இவ்வாலயத்திற்கு பயன்படுத்தப்பட்டன எனத் தொிவிக்கிறது. 

       இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய” நிகழ்வினைப் பற்றி இக்கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்படுவது மிகச்சிறப்பான ஒன்றாகும். காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலையில் பாஸ்கர மன்னன் இரவி வர்மனுனடனான போரில் ராஜராஜ சோழன் மகத்தான வெற்றி  பெற்றும் சேரமன்னனின் கலங்கள் எனும் கப்பல்களை அழித்தால் “காந்தளுர்சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி” எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்,  முதலாம் இராஜராஜ சோழனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. 

        கோவிலின் வரவு செலவு கணக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டி, தானியங்கள் , காய்கறிகள் வாங்கிய விபரங்கள் உட்பட கோவிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. 

        ராஜராஜன் வெற்றி கொண்ட நாடுகளாக காந்தளுர் சாலை கலமறுத்தருளி வேங்கைநாடும், கங்கபாடியும் கங்கபாடியும் எனும் மெய்கீர்த்திகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

        இவ்வூரில்ஊர் வெள்ளம் வந்து பாதித்த போது ஒருவர் ஊர்க்கோவிலுக்கு கொடுத்த மானியமாக தனது நிலத்தைக் கொடுத்த குறிப்பு கல்வெட்டில் உள்ளது. 


சோமேஸ்வரர் என்ற திருநோம்பலூர் மகாதேவர் பற்றிய சிறப்புகள். 

    சந்திரன் இக்கோவிலை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்ற சிறப்பு மிக்க தலமாகும். 

கருவூர்ப்புராணம் ஆம்பிராவதி நதிச்சருக்கத்தில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது. 

சோமநாத இலிங்கம்

        தாமம் நாற்றிய தண் தரளமே போலத்

தட மலர் மடல் அவிழ் பூகச்

        சோமநாதத்தில் தண் சுடர்க் கலையோன்

துகளறு முனிவரன் தலைவி

        காமர் பூங்குழழியால் வரும் சாபம்

தொலைவறக் கடிமலர் மழைதூய்

           ஏமற வழுத்தூம் சோமநாதப்பேர்

இலிங்கம் ஒன்று உள்ளது இசைக்க அரிதால்

        சோமவாரமான திங்கள் அன்று இங்குள்ள இறைவனை வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் அன்று வரும் பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி தினங்களில் அன்னதானம் மற்றும் வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் வாழ்வில் முன்னேற்றங்கள் பெற முடியும். 

சோமவாரம் என்ற பெருமைக்குரிய திங்கள் அன்று இக்கோவிலில் இருக்கும் சிவனை வழிபட்டு சென்று நற்பேறு பெற்றதால் சோமேஸ்வரர் எனும் சிறப்பு பெயர் பெற்றதாகவும், இவ்வூருக்கு பின் நாட்களில் சோமூர் என்றும் ஆகிவிட்டது.  

இக்கோவிலையும் அருகே  உள்ள அக்னிபுரீஸ்வரர் ஆலயமும், சூரியனின் வணங்கிய ரவீஸ்வரர் ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது நற்பலன்களைத் தரும்.

2010 இல் திருப்பணி செய்ய ஆரம்பிக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேகப்பணி நடைபெறாமல் உள்ளது. இறையன்பர்கள் உதவி செய்ய விரும்பினால் இக்கோவிலின் உள்ளுர் பொறுப்பாளர் திரு. பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு உதவி செய்து 10 நூற்றாண்டுக்கும் முன் சோழர்கள் வழிபட்ட சிவனை தொடர்ந்து வழிபாடு நடத்திட உதவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மீண்டும் மற்றுமொரு பழமையான சிவாலய தரிசனத்தில் உங்களை சந்திக்கிறேன். 

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி. 

சிவசங்கர்
9976913310
திண்டுக்கல்

8 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது

திருக்காளேஸ்வரர் கோவில்


முழு வீடியோ தொகுப்பு

வரலாற்று சிறப்பு மிக்க 8, 12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் கற்றளி சிவன் கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டது.



 அமைவிடம் :

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை கிராமம், குடிவெண்டை எனும் சிற்றூர் அருகே  மலைக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.


செல்லும்வழி

திண்டுக்கல் – கரூர் செல்லும் வழியில் குஜிலியம்பாறைக்கு கிழக்கே மணப்பாறை செல்லும் சாலையில் 4 கிமீ தொலைவில் சேவகவுண்டச்சிபட்டி குடிவெண்டை கிராமங்களுக்கு அருகே உள்ள ஒரு மலைக் குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.


ஈஸ்வரன் பாறை என்றழைக்கப்பட்ட இச்சிறிய பாறையின் மீது இருந்த கல்மண்டபம் பெருமாள் கோவில் என்றழைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்தது. பின்னர் இக்கோவிலை நானும் நண்பர் திரு. ஜெகதீஸ் அவர்களும் பார்வையிட்டு கல்வெட்டு  செய்திகளில் சொல்லப்பட்ட விபரங்களை திரு. பொன் கார்த்திகேயன் என்பவரிடம் கேட்டுப் பெற்றோம்.

 

கற்றளி கோவில்

ஒரு தள அமைப்புடைய கற்றளி கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையின் விமானம் முழுதும் சேதமடைந்து உள்ளது. அர்த்த மண்டபம் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. மேல்தளத்தில் கிளுவை மரம் ஒன்று முளைத்து கட்டிடத்தை சிதைத்து வருகிது.  பாறையின் மீது சமதள அமைப்பை தோ்வு செய்து கிழக்கு பார்த்து மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மக்களின் தொடர்ச்சியான கவனிப்பின்மையால் சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.


 கற்கோவிலானது அழகிய வேலைப்பாடுகளுடன் மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறையைச் சுற்றிலும் உள்ள கோஷ்டங்களில் சிலைகள் இல்லை.  5 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாண்டியர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்துள்ளனர். பீம் அமைப்பும் அதில் அழகிய பூக்கள் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியும் கோவிலின் உடைந்த பாகங்களைக் காணலாம். கோவிலைச் சுற்றிலும் அக்கால செங்கற்களையும் ஓடுகளையும் காண முடிகிறது. 



நந்தி

மலைக்குக் கிழக்கே பொிய அளவிலான நந்தி தலை இல்லாமல் உள்ளது. மலைக்கு மேலேயிருந்து யாரோ உருட்டி விட்டதன் விளைவாக  நந்தி சிலை சேதப்பட்டுள்ளது. புலித்தோல் போர்த்திய அமைப்பில் மிக அழகாக உயிர்ப்புடன் நந்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உடல் பகுதியை தொட்டுப் பார்க்கும் போது பசுவைத் தொடும் உணர்வு ஏற்படுகிறது. 


தீர்த்தக்குளம்

கோவிலின் மேற்கு பக்கம் இரண்டு சிறிய தண்ணீர்ப்பாளிகள் உள்ளன. சிறிய பாளியில் இருந்து கோவிலின் அபிஷேகத்திற்கும் பொிய பாளித் தண்ணீர் பொது மக்களின் பயன்பாட்டிற்கும் இருந்துள்ளது. 

 

கல்வெட்டு செய்திகள்

கோவிலின் கிழக்கே செவ்வகவடிவில் 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.


இப்பகுதி குறுநில மன்னன் பாண்டி அரட்டவதி அரயனின் தாயார் பாண்டிப் பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக காள ஈஸ்வரம் என்ற இக்கோவிலைக் கட்டியாதாக எழுதப்பட்டுள்ளது. கடைசியாக இக்கோவிலைக் காப்பவர்களின் பாதங்களை என் தலைமேல வைத்து தாங்குவேன் என - "இது காத்தாரடி என்றலை மேலென" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.


கோவிலின் மேற்கு மற்றும் தெற்கு பக்க குமுத வரிகளில் உள்ள கல்வெட்டில்


சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தட்டையூர் நாட்டில் இக்கோவில் இருந்ததாகவும், திருக்குன்றத் தளியுடைய நாயனார் என்று இங்குள்ள சிவனுக்கு பெயர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பூசைக்கு வழங்கப்பட்ட நிவந்தம் பற்றியும் இந்த தானமானது சந்திரர் சூரியர் உள்ளவரை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோவிலின் கிழக்கே தூண்கல் அமைப்பிலான கல்வெட்டில் செய்திகள் 


இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட மானியம் பற்றியும் சண்டேஸ்வரர் சன்னதி இருந்ததையும் சிவப் பிராமணர்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்த கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாண்டியர்களால் எட்டாம் நூற்றாண்டில் செங்கற்களால் செங்கற்றளியாக கட்டப்பட்ட இக்கோவிலானது 12 ஆம் நூற்றாண்டின் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளி கோவிலாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.  மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

அபூர்வ சிவலிங்கம்

📌 தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட  இக்கோவிலில் 8 பட்டை வடிவிலானஇ ருத்ர பாகம் மட்டுமே இருக்கும் அபூர்வ வடிவான சிவ லிங்கமும் புதையுண்டு இருந்ததை குஜிலியம்பாறையைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவசுப்பிரமணியன் (பஞ்சர் பாலு) தலைமையில் காய்க்காரர் முருகேசன், ஜெகதீஸ், நாகலட்சுமி, ஆகியோர்கள்  முட்புதர்களை அகற்றி உழவாரப்பணி செய்து கண்டறிந்தனர். இதே போன்ற அமைப்புடைய சிவலிங்கம் நேபாளம் மற்றும் இலங்கையில் மட்டுமே உள்ளது.






09.05.2021 முதல் பிரதோஷ வழிபாட்டுடன் தொடர்ந்து வழிபாட்டில் இக்கோவில் இருந்து வருகிறது.

தேவர்மலை பஞ்சாயத்துக்குட்பட்ட ஊர்ப் பெரியவர்கள், தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஒன்று கூடி ஒவ்வொரு பிரதோஷம், பெளர்ணமி மற்றும் விசேச நாட்களில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

 குஜிலியம்பாறை ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் சோலார் விளக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இக்கற்றளிக் கோவிலையும், கல்வெட்டுகளையும் வரலாற்று ஆய்வாளர்களும்,  பேராசிரியர்களும்,  மாணவர்களும் பார்வையிட்டு செல்கின்றனர்.

 வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளைப் பற்றியும் நம் முன்னோர்களின் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, வீரம், தெய்வ வழிபாடு இவைகளை காப்பாற்றுவதுடன் அடுத்த தலைமுறைக்கு சொல்லி வைப்பதும் நம் கடமையே.

 📌 நம் குழந்தைகளையும், பள்ளி கல்லூரி மாணவர்களையும் அழைத்து வந்து கற்றளியையும், தமிழ் மொழியின் பழங்கால வட்டெழுத்து கல்வெட்டுகளையும் காண வைப்போம்.

🔥 "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" எம் தமிழ்க்குடி எனும் பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்.

ஆள் அரவமற்ற மலைப்பகுதியில் இன்று தினம்தோறும் மக்கள் வருவதையும், பிரதோஷ பூஜை, பெளர்ணமி நாட்களில் சுமார் 600 பேருக்கும் குறைவில்லாமல் வந்து செல்வதைக் காணும் போது பாண்டிப் பெருந்தேவியின் வரிகளே நினைவுக்கு வருகிறது. இக்கோவிலைக் காப்பவர்களின் பாதங்களை என் தலைமேல வைத்து தாங்குவேன் என  நினைத்தவரின் ஆன்மாவும் கூட இக்காட்சியைக் காண தவம்தான் இருந்திருக்குமோ என...

 

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி.

 

அன்புடன்

சிவசங்கர் 

Mobile No : 9976913310

திண்டுக்கல்

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...